2016-01-27 15:35:00

அமைதி ஆர்வலர்கள் : 2006ல் நொபெல் அமைதி விருது - பாகம்1


சன.27,2016. “பலராலும் கொண்டாடப்படும் பொருளாதாரக் கோட்பாடுகள், பசியைப் பற்றியும், வறுமையைப் பற்றியும் பேசுவதில்லை. பொருளாதார முன்னேற்றம் நிகழும்போது, இந்தச் சிறிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று அவை போதிக்கின்றன. இந்த நிபுணர்கள், முன்னேற்றம் மற்றும் அதனால் கிடைக்கும் வளமான வாழ்க்கை பற்றி மட்டுமே திட்டமிடுவதில் முழு நேரத்தையும் செலவிடுகின்றனர். வறுமையும், பசியும் நிகழ்த்தும் கொடுமைகளைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. உலகம் எப்போது வறுமை ஒழிப்பை ஒரு முக்கிய, அவசரத் திட்டமாக நினைக்கின்றதோ அப்போதுதான், இந்த வெட்கித் தலைகுனியும் நிலைமை மாறி, நாம் பெருமைப்படும்படியான ஓர் உலகத்தை உருவாக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”. இவ்வாறு முகமது யூனுஸ்(Muhammad Yunus) அவர்கள், 1994ம் ஆண்டில், தனக்கு வழங்கப்பட்ட “உலக உணவு விருதை(world Food Prize)”ஏற்றுக் கொண்டு ஆற்றிய உரையில் சொன்னார். முகமது யூனுஸ் அவர்கள், இந்த விருது தவிர, 2006ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது, அதே ஆண்டில், அன்னை தெரசா விருது, எட்டாவது செயோல் அமைதி விருது, 1978ம் ஆண்டில், பங்களாதேஷ் குடியரசுத் தலைவர் விருது, 1984ம் ஆண்டில் ரமோன் மகசேசே(Ramon Magsaysay) விருது, 1985ம் ஆண்டில் பங்களாதேஷ் வங்கி விருது, 1996ம் ஆண்டில் யுனெஸ்கோ சைமன் பொலிவார் விருது, 2000மாம் ஆண்டில் காந்தி அமைதி விருது.. இவை தவிர, மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

2006ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது, முகமது யூனுஸ்(Muhammad Yunus) அவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர் நிறுவிய கிராமின் வங்கிக்கும் (Grameen Bank) வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி இவ்விருதை அறிவித்த நார்வே நொபெல் விருதுக் குழு, "சிறுகடன்(micro credit) வழங்கும் திட்டத்தின் வழியாக, ஏழைகளின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு இவர்கள் எடுத்த முயற்சிகளுக்காக" இவ்விருது வழங்கப்படுவதாகக் கூறியது. மேலும், "கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் கணக்கில் எடுக்காமல், உலகம் முழுவதும் வறுமை ஒழிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கிராமின் வங்கியும், அதன் நிறுவனர் முகம்மது யூனுஸ் அவர்களும் தீவிரமாகப் பாடுபட்டு வருகிறார்கள். வறுமையில் உழலும் மக்கள், உலகில் அதிகளவில் இருக்கும் வரையில், நிலையான அமைதியை எட்ட முடியாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் யூனுஸ் அவர்கள் செயல்பட்டு வருகிறார். வறுமையிலும் வறிய நிலையில் வாழும் மக்களும், தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்காக உழைக்க முடியும், இத்தகைய வழிமுறைகளில் ஒன்றுதான் சிறுகடன் வழங்கும் திட்டம். சமூகத்தில் நலிந்தவர்களின் வளர்ச்சி, சனநாயகமும், மனித உரிமைகளும் முன்னேறுவதற்கு வழி அமைக்கும் என்பதை, யூனுஸ் அவர்களும், கிராமின் வங்கியும் நிரூபித்திருக்கின்றனர். வறுமையை ஒழித்தால்தான் உலகில் அமைதியைக்கொண்டு வர முடியும் என்ற அவரது எண்ணம் பாராட்டத்தக்கது" என்றும் நார்வே குழு பாராட்டியது. தொழில் முனையும் ஏழைகளுக்கு வழங்கப்படும் சிறுதொகைக் கடனே, சிறுகடன் என்பதாகும்.

ஏழை மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குத் தொடர்ந்து உழைத்து வரும் முகம்மது யூனுஸ் அவர்கள், பங்களாதேஷ் நாட்டின் சிட்டகாங் அருகே பத்துவா என்ற கிராமத்தில் 1940ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி பிறந்தார். இவரது தந்தை Hazi Dula Mia Shoudagar அவர்கள், ஒரு நகை வர்த்தகர். இவரது தாய் Sufia Khatun, உதவி என்று யார் வந்தாலும் ஓடிச்சென்று உதவுபவர். யூனுஸ் அவர்களும், தன்னால் இயன்றவரை அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற நற்பண்பில் வளர்க்கப்பட்டார். Jahangirnagar பல்கலைக்கழகப் பேராசிரியரான Afroji Yunus என்பவரை யூனுஸ் மணமுடித்துள்ளார். இவருக்கு Dina Yunus, Monica Yunus என்று இரு மகள்கள் உள்ளனர். யூனுஸ் அவர்கள், டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரயியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் Vanderbilt பல்கலைக்கழகத்தில் பொருளாதாரக் கல்விப் படிப்பிற்கு முழு உதவித்தொகை பெற்ற இவர், 1969ம் ஆண்டில் பொருளாதாரயியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1972ம் ஆண்டுவரை, அமெரிக்காவின் Middle Tennessee மாநிலப் பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். பங்களாதேஷின் சுதந்திரப் போரின்போது, 1971ம் ஆண்டில், யூனுஸ் அவர்கள், குடிமக்கள் கழகத்தைத் தொடங்கினார். அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்த பங்களாதேஷ் மக்களோடு சேர்ந்து, நாட்டின் விடுதலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக, பங்களாதேஷ் தகவல் மையத்தை நடத்தினார். Nashvilleல், தனது வீட்டிலிருந்தே பங்களாதேஷ் செய்தி மடல் ஒன்றை நடத்தினார்.

பங்களாதேஷில் போர் முடிந்த பின்னர், நாட்டிற்குத் திரும்பிய யூனுஸ் அவர்கள், சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைக்குத் தலைமை வகித்து, பேராசிரியராகவும் பணியாற்றினார். அரசின் திட்டக் குழுவுக்கும் இவர் நியமிக்கப்பட்டார். 1974ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தைக் கவனித்த யூனுஸ் அவர்கள், ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். ஓர் ஆய்வுத் திட்டமாக, கிராம பொருளாதாரத் திட்டத்தை ஆரம்பித்தார். அவ்வாண்டில், பின்தங்கிய கிராமங்களுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றார். 1975ம் ஆண்டில் புதிய சகாப்தம் என்ற திட்டத்தைத் தொடங்கிய இவரும், இவரோடு சேர்ந்தவர்களும் கிராம நிர்வாகம் என்ற திட்டத்தைத் தொடங்குமாறு அரசுக்குப் பரிந்துரைத்தனர். அதன்படி, 2003ம் ஆண்டில் 40,392 கிராம அரசுகள் பங்களாதேஷில் இருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.