2016-01-26 15:00:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 7


நாம் வாழும் இந்நாட்களில், அடையாள அட்டைகள் இன்றி வாழ்வது ஆபத்தானது, நம்மை அடையாளப்படுத்தும் அட்டைகள் இன்றி வீட்டைவிட்டு வெளியேறினால், காணாமற் போகும் வாய்ப்பு அதிகம் உண்டு என்று சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம்.

நம் வாழ்வு, அடையாள அட்டைகளால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது போதாதென்று, நாம் வணங்கும் கடவுளுக்கும் அடையாள அட்டைகள் தந்துள்ளோம் என்பது, நாம் உருவாக்கிக் கொண்ட ஓர் இக்கட்டானச் சூழல். உண்மைக் கடவுள் ஒருவரே என்றாலும், அவருக்கு நாம் ஆயிரமாயிரம் அடையாள அட்டைகளை வழங்கி, கடவுளைக் கூறுபோட்டு வைத்துள்ளோம். இதில், கூடுதலான ஒரு சங்கடம் எழுகின்றது. அடையாள அட்டைகள் இன்றி, நாம் காணாமற் போய்விடுகிறோம். அடையாள அட்டைகளை ஆயிரமாயிரமாய் நாம் குவித்துவிட்டதால், உண்மைக் கடவுள் காணாமற் போய்விட்டார்.

உயர்ந்த, உன்னதமான, உண்மையான மதங்களின் ஊற்றுக்களை நாம் நாடிச் சென்றால், அங்கு நாம் சந்திக்கும் இறைவன், இரக்கமே உருவாக, அன்பே வடிவாக இருப்பார். அவை மட்டுமே அவரது அடையாளங்கள்.

கிறிஸ்தவ மறையிலும், விவிலியம் முழுவதும் நாம் சந்திக்கும் இறைவன், இரக்கமே உருவானவர். ‘இரக்கத்தின் முகம்’ என்ற மடலின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோசேக்கு தன்னையே அறிமுகப்படுத்திக்கொள்ளும் இறைவனை, நமக்கு அறிமுகப்படுத்துகிறார். துயருறும் இஸ்ரயேல் மக்களோடு தன்னை இணைத்துக் கொள்வதே, இறைவனின் அடிப்படை இயல்பு என, திருத்தந்தை சுட்டிக்காட்டுகிறார்.

மடலின் இரண்டாம் எண்ணில், திருத்தந்தை, மூவொரு இறைவனைப் பற்றி கூறும் அழகிய எண்ணங்கள் இதோ: “இரக்கம் என்ற மறையுண்மையை நாம் தொடர்ந்து தியானிக்க கடமைப்பட்டுள்ளோம். நமது மீட்பே அந்த இரக்கத்தைச் சார்ந்தது. மிகப் புனிதமான மூவொரு இறைவன் என்ற மறையுண்மையை வெளிப்படுத்தும் ஒரே சொல், இரக்கம். நம்மைச் சந்திக்க வரும் இறைவனின் மிக உன்னத செயல்பாடு, இரக்கம். வாழ்வுப் பாதையில் சந்திக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரியின் கண்களை நேரிய உள்ளத்துடன் காணவிழையும் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்தில் குடிகொண்டிருப்பது, இரக்கம். இறைவனையும், மனிதரையும் இணைக்கும் பாலம், இரக்கம்.” (இரக்கத்தின் முகம். எண் 2 )

அன்பே சிவம் என்று, இந்துமதப் பாரம்பரியத்தில் சொல்லப்பட்டுள்ளதை நாம் அறிவோம். திருமூலர் எழுதியுள்ள திருமந்திரத்தில் நாம் காணக்கூடிய உன்னத எண்ணங்களை, 'தமிழ் இணையக் கல்விக் கழகம்' (Tamil Virtual Academy) பின்வருமாறு தொகுத்துள்ளது:

அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார்

அன்பே சிவமானது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

“அன்பு சிவம் என்பவை இரண்டு பொருள் அல்ல, அன்பே சிவம் என்பதை உணர்ந்தவர் சிலரே. அவர்களே ஞானிகள்; அவர்களே கடவுள் தன்மை பெற்றவர்கள்” என்கிறார் திருமூலர்.

இஸ்லாமிய மதத்தின் உயிர் நாடியெனக் கருதப்படும் 'குர்ஆனின்' ஒரே ஒரு பிரிவைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரிவுகளின் துவக்கத்திலும், "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் தொடங்குகிறேன்" என்ற வார்த்தைகள் காணக் கிடக்கின்றன. (விக்கிப்பீடியா) அதேபோல், ஒவ்வொரு பிரிவின் துவக்கத்திலும் சொல்லப்படும் செபம், “In the name of God, Most Gracious, Most Merciful” அதாவது, “மிகவும் அருள் செறிந்த, மிகவும் இரக்கம் நிறைந்த இறைவன் பெயரால்” என்ற வார்த்தைகள், செபமாகச் சொல்லப்படுகின்றன.

இத்தகையப் பாரம்பரியத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் இருவர், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள, 'இரக்கத்தின் முகம்' (Misericordiae Vultus) என்ற  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மடலை வாசித்தப்பின், தங்கள் கருத்துக்களை வழங்கியுள்ளனர்:

இந்தோனேசியாவின் அலாவுதீன் (Alauddin) அரசு இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் Qasim Mathar அவர்கள், “இரக்கம் மற்றும் மன்னிப்பு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மடல், இறைவாக்கினர் முகமது அவர்களின் செய்தியை மீண்டும் நினைவுபடுத்தி, அதற்கு வலிமை சேர்க்கின்றது. திருத்தந்தையின் செய்தி, கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல, இஸ்லாமியருக்கும், பிற மத நம்பிக்கையாளர் அனைவருக்கும் ஏற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் சிறுபான்மை மொழிகள் குழுவின் தலைவர், பேராசிரியர், Akhtarul Wasey என்ற இஸ்லாமியர், “இரக்கம் கடவுளுக்குரிய பண்பு, நாம் ஒருவர் ஒருவரிடம் இரக்கமுள்ளவர்களாக வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார், முஸ்லிமாகிய நான், எனது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளோடு சேர்ந்து கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நமக்கு அடுத்திருப்பவரின் வாழும் நிலைகளை மேம்படுத்த, திருத்தந்தை, இம்மடல் வழியே விடுத்துள்ள அழைப்பை ஏற்று, நன்மனம் கொண்ட மனிதர்கள், கத்தோலிக்கத் திருஅவையுடன் இணைந்து செயலாற்றுவர்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்டுள்ள மடல், இவ்விரு இஸ்லாமிய அறிஞர்களில் உன்னதச் சிந்தனைகளை உருவாக்கியதுபோல், இன்னும் ஏனைய மதங்களைச் சேர்ந்த பல நூறு பேரில் தாக்கங்களை உருவாக்கியிருக்கும் என்பதை நம்பலாம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு சனவரி மாதத்திற்கென வெளியிட்ட செபக் கருத்து, நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதமும் வழங்கிவரும் செபக் கருத்துக்கள், நிகழும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு புதிய முயற்சியாக, முதன் முதலாக, ஒரு காணொளி வடிவில் சனவரி மாதம் 6ம் தேதி வெளியிடப்பட்டது. YouTubeல் 1 நிமிடம், 32 நொடிகள் நீடிக்கும் இக்காணொளித் தொகுப்பினைக் கண்டு பயன்பெற உங்களை அழைக்கின்றேன்.

இக்காணொளித் தொகுப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செபக் கருத்தை இஸ்பானிய மொழியில் விளக்கியுள்ளார். அவரது கூற்றுக்கள், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியம், உட்பட, இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைக்கு மேல், வார்த்தைகளாய் பதியப்பட்டுள்ளன: "இந்த பூமிக் கோளத்தில் வாழும் பெரும்பான்மையானோர், மத நம்பிக்கையுள்ளவர்கள் என்று பறைசாற்றுகின்றனர். இந்த உணர்வு, மதங்களிடையே உரையாடலுக்கு வழிவகுக்க வேண்டும். இந்த உரையாடலுக்காக நாம் செபிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது; வேறுபட்ட சிந்தனையுடைய பிறரோடு ஒத்துழைக்கவும் முயற்சி எடுக்கவேண்டும்" என்று திருத்தந்தை கூறியதும், நால்வர், திரையில் தோன்றுகின்றனர்.

புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் துறவி முதலில் தோன்றி, "நான் புத்தாவை நம்புகிறேன்" என்று கூறுகிறார். இவரைத் தொடர்ந்து, ஒரு யூத மத குரு, "நான் கடவுளை நம்புகிறேன்" என்றும், ஒரு கத்தோலிக்க அருள் பணியாளர், "நான் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்" என்றும் கூறுகின்றனர். இறுதியாகத் தோன்றும், ஓர் இஸ்லாமிய இமாம், "நான் அல்லா, கடவுளை நம்புகிறேன்" என்று கூறுகிறார்.

இவர்கள் அறிக்கையிட்ட இந்த நம்பிக்கை கூற்றுகளைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "பலரும் பலவாறு எண்ணுகிறோம், உணர்கிறோம். இறைவனைத் தேடுவதிலும், சந்திப்பதிலும் நாம் வேறுபட்ட பாதைகளைத் தொடர்கிறோம். இந்த வேறுபாடுகளிடையே, நம்மிடம் உள்ள ஒரே ஓர் உறுதி: நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற உறுதி" என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து, நான்கு மதங்களைச் சேர்ந்தவர்களும் மீண்டும் ஒருமுறை திரையில், ஒருவர் பின் ஒருவராகத் தோன்றி, "நான் அன்பை நம்புகிறேன்" என்று கூறுகின்றனர்.

இக்காணொளி பதிவின் இறுதிப்பகுதியில், திருத்தந்தை, இம்மாதத்திற்குரிய கருத்தை வெளியிடுகிறார்: "பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட ஆண்கள், பெண்கள் நடுவே நிகழும் உண்மையான உரையாடல், அமைதி, நீதி ஆகிய கனிகளை உருவாக்கவேண்டும்" என்பதே, அவர் கூறும் செபக் கருத்து. காணொளியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'உங்கள் செபங்களில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்ற வார்த்தைகளுடன் இந்தக் காணொளிப் பதிவை நிறைவு செய்துள்ளார்.

இந்தக் காணொளித் தொகுப்பின் இறுதிக் காட்சியாக, புத்தம், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்களின் அடையாளங்களை, நால்வரும் கரங்களில் ஏந்தி, அருகருகே கொணர்கின்றனர். காட்சி நிறைவடைகிறது.

பல்வேறு மதங்களின், கலாச்சாரங்களின் தொட்டில் என்று வழங்கப்படும் இந்தியா, தன் 67வது குடியரசு நாளை, சனவரி 26, இச்செவ்வாயன்று சிறப்பித்தது. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குடியரசு விழாவில், தன் இராணுவச் சக்தியை வெளிப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டிவரும் இந்திய அரசு, இந்நாட்டின் மிக முக்கியமான சக்தியான மக்களின் சக்தியை, மக்களின் ஒற்றுமையை, உலகிற்கு உணர்த்த தவறி வருகிறது. பிரித்தாள்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள், இறைவனையும், மதங்களையும் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, மக்களைப் பிரித்து வருகின்றன. "பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட ஆண்கள், பெண்கள் நடுவே நிகழும் உண்மையான உரையாடல், அமைதி, நீதி ஆகிய கனிகளை உருவாக்கவேண்டும்" என்று திருத்தந்தை விடுத்துள்ள செபக்கருத்து, இந்தியாவில் ஆழமாக வேரூன்றவேண்டும் என்று மன்றாடுவோம்.

சனவரி 27, இப்புதனன்று, 'அகில உலக தகன நினைவு நாள்' (International Holocaust Remembrance Day) கடைபிடிக்கப்படுகிறது. மனிதர்கள் தங்களுக்குள் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட மற்றொரு பிரிவு, இனம். யூத இனத்தை வேரோடு அழிக்கும் ஒரு முயற்சியாக உருவான நாத்சி வதை முகாம்களிலிருந்து யூதர்களை விடுவித்த நாளையே, நாம் உலக தகன நினைவு நாளாகக் கடைபிடிக்கிறோம்.

உண்மை இறைவன், அன்பும், இரக்கமும் உருவானவர்; அவரை, பல்வேறு அடையாளங்களால் கூறுபோட்டு காட்டும் மதங்கள், இனங்கள் என்ற அடையாள அட்டைகளைக் களைந்து, நீதி, அமைதி ஆகிய கனிகளை மனிதக் குடும்பம் சுவைப்பதற்கு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நமக்கு உதவவேண்டுமென்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.