2016-01-26 15:58:00

திருநற்கருணை மாநாடு, நற்செய்தி அறிவிப்புக்கு இன்றியமையாதது


சன.26,2016. திருநற்கருணையை, நம் வாழ்வாக்குகிறோமா என்ற கேள்வியையும், அது நமக்கு ஒரு முக்கிய பணியை முன்வைக்கின்றது என்றும், மணிலாவின் முன்னாள் பேராயர் கர்தினால் Gaudencio Rosales அவர்கள் இச்செவ்வாயன்று கூறினார்.

பிலிப்பீன்சின் செபு நகரில் நடைபெற்றுவரும் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டின் மூன்றாவது நாளாகிய இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார், கர்தினால் Rosales.

திருநற்கருணை, கிறிஸ்துவின் மீட்பளிக்கும் தியாகத்தின் நினைவாகும், கிறிஸ்துவின் திருஉடலை ஒருவர் உட்கொள்ளும்போது, நம் ஆண்டவர் இயேசுவில் கொண்டுள்ள விசுவாசத்தின் வல்லமையை பிறருக்கு அறிவிக்கிறார் என்றும் கூறினார் கர்தினால் Rosales.

மேலும், திருநற்கருணை மாநாடு, நற்செய்தி அறிவிப்புக்கு இன்றியமையாதது என்று, இந்த 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொள்ளும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் Los Angeles துணை ஆயர் Robert Barron அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும், மற்றவர் சொல்வதற்குச் செவிசாய்த்து வருகின்றனர், இது ஒருவர் ஒருவரை ஊக்கமூட்டுவதாய் உள்ளது என்றும் கூறினார்.

இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு, சனவரி 31, வருகிற ஞாயிறன்று நிறைவடையும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலகில் ஏதாவது ஒரு நாட்டில் அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறுகின்றது.

ஆதாரம் : CBCP/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.