2016-01-26 16:15:00

சிரியாவில் கிறிஸ்தவர்கள் மீது மீண்டும் தாக்குதல்


சன.26,2016. சிரியாவின் வட கிழக்கில் உள்ள Qamishli நகரின், கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் இறந்துள்ளனர், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இறந்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என உரைத்த, சிரிய வழிபாட்டுமுறை, Hassakè-Nisibis பெருமறைமாவட்ட பேராயர் Jacques Behnan Hindo அவர்கள்,  இது மதத் தீவிரவாதிகளின் செயலாகத் தெரியவில்லை, மாறாக, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் சில குழுக்களிடையேயான மோதல் என சந்தேகிப்பதாகக் கூறினார்.

பயங்கரவாதம் கவலையளிப்பதாக உள்ளது, ஆனால், இந்த பயங்கரவாதத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவில்லாமல் இருப்பது, இன்னும் கவலை தருவதாக உள்ளது என மேலும் கூறினார் பேராயர்.

இதற்கிடையே, ஈராக்கின் மிகப் பழமையான கிறிஸ்தவத் துறவுமடம் ஒன்று, இஸ்லாமியத் தீவிரவாதிகளால் முற்றிலுமாக சேதமாக்கப்பட்டுள்ளது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர், அப்பகுதி கிறிஸ்தவர்கள்.

ஈராக்கில் கிறிஸ்தவ இருப்பின் அடையாளமாக இருந்த 'எலியாவின் துறவு மடம்' அழிவுக்குள்ளாகியுள்ளது, இதயத்தைப் பிழியும் ஒரு செய்தி என்றார் ஈராக் துறவி, அருள்பணி Dankha Issa.

ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பழமையுடைய இத்துறவு மடத்தை சேதப்படுத்தியுள்ள Daesh என்ற இஸ்லாமிய தீவிரவாத குழு, ஏற்கனவே சிரியாவில், 1600 ஆண்டுகள் பழமையுடைய Mar Elian துறவுமடத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம், al-Qaryatayn நகரில் அழிவுக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.