2016-01-26 15:55:00

சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது வரி விதிக்க விண்ணப்பம்


சன.26,2016. சர்க்கரை கலந்த பானங்கள், சிறார் உடல்பருமனை அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில், இத்தகைய குடிபானங்கள் மீது அரசுகள் வரிவிதிப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என உலக நலவாழ்வு நிறுவனம் WHO தெரிவித்துள்ளது.

குழந்தைப் பருவத்தில் உடல் பருமனாதலை குறைப்பதற்கான முக்கியத்துவம் குறித்த அறிக்கை ஒன்றில், உலக நலவாழ்வு நிறுவனம், இந்த பரிந்துரையை முன் வைத்துள்ளது.

1990ம் ஆண்டு முதல், உலக அளவில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 33 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று கூறும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் இந்த அறிக்கை, ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் நான்கு கோடி சிறுவர்களில் பாதி பேர், ஐந்து வயதாவதற்கு முன்னரே கடும் பருமனாகிவிடுவதாகவும், இதற்கு, வளர்ந்து வரும் நாடுகளில், ஆரோக்கியமற்ற மற்றும் சர்க்கரை கலந்த குடிபானங்களின் தீவிர சந்தைப்படுத்தலே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்காலச் சிறார்கள், வெளியில் விளையாடுவதைத் தவிர்த்து, இணைய விளையாட்டுக்களில் அதிக நேரம் செலவிடுவதால், அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமையும் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்றும், உலக நலவாழ்வு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.