2016-01-26 15:52:00

கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவரைப் புண்படுத்தியதற்காக மன்னிப்பு


சன.26,2016. கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பிரிவினைகளுக்காக, இறைவனின் இரக்கத்தை இறைஞ்சிய அதேவேளை, கிறிஸ்தவர்கள் அனைவரும் நம் ஆண்டவர் விரும்பிய ஒன்றிப்பின் பாதையில் நடக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளும், புனித பவுல் அடிகளார் மனந்திரும்பிய விழாவுமான இத்திங்கள் மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில், பல்வேறு கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளுடன் சேர்ந்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாட்டை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

பிற கிறிஸ்தவ சபை உறுப்பினர்களை, கத்தோலிக்கர் புண்படுத்தியிருப்பதற்காக மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தில் அல்லது கடந்த காலத்தில் பிற கிறிஸ்தவ சபை உறுப்பினர்களால், எனது கத்தோலிக்க சகோதர சகோதரிகள் புண்படுத்தப்பட்டிருந்தால், அவர்களை மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நாம் கடந்த காலத்தில் நடந்தவைகளை அழித்துவிட முடியாது, ஆனால், கடந்த காலத் தவறுகளின் சுமைகள், நம் உறவுகளைத் தொடர்ந்து கெடுப்பதற்கு நாம் அனுமதிக்க விரும்பவில்லை என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உடலில் திறந்த காயமாகத் தெரியும் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பிரிவினை என்ற பாவத்திற்காக மன்னிப்புக் கேட்போம் என்றும் கூறினார்.

பிற சபைகளின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, நற்செய்திக்கு முரணான வகையில்  கத்தோலிக்கர் நடந்துகொண்டதற்காக, உரோம் ஆயர் மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் மேய்ப்பர் என்ற முறையில், இறைவனின் இரக்கத்தையும், மன்னிப்பையும் இறைஞ்சுகிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆர்த்தடாக்ஸ் பேராயர் Gennadios, ஆங்லிக்கன் பேராயர் David Moxon ஆகிய இருவருடன் புனித பவுல் பசிலிக்கா புனிதக் கதவு வழியாகச் சென்று இத்திருவழிபாட்டை நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுலடிகளாரும், எண்ணற்ற கிறிஸ்தவ மறைசாட்சிகளும், நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக, தங்கள் உயிரைக் கையளித்துள்ளனர், இம்மறைசாட்சிகள், தங்களின் செபத்தாலும், எடுத்துக்காட்டான வாழ்வாலும் இக்காலத்திய கிறிஸ்தவர்களை வழிநடத்துவார்களாக என்றும் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.