2016-01-25 15:54:00

வாரம் ஓர் அலசல் – நான் பசியாய் இருந்தேன், உண்ணக் கொடுத்தாய்


சன.25,2016. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைசாட்சியாக உயிர்நீத்த ஜப்பானிய சாமுராய் Takayama Ukon அவர்களை, அருளாளர் என்று அறிவிப்பதற்கு உதவும் அவரின் வாழ்க்கைக் குறிப்புக்களை சனவரி 23, கடந்த வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுள்ளார். ஜப்பானில் மத்திய மற்றும் நவீன காலத்தின் தொடக்கத்தில் இராணுவத்தில் உயர் பதவியில் இருந்தவர்கள் சாமுராய்க்கள். இவர்கள் பேரரசர்களுக்கு மிக நெருக்கமாக இருந்து பணியாற்றுபவர்கள். இறையடியார் சாமுராய் Takayama அவர்கள், ஜப்பானிய சமுதாயத்தில் daimyo என்ற உயர் பதவியில் இருந்தவர். பெரிய பண்ணைகளைக் கொண்டிருப்பது, பெரிய படைகளை உருவாக்குவது போன்ற பல சலுகைகளைப் பெற்றிருந்தவர். ஜப்பானில், இயேசு சபை மறைப்பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கியிருந்த காலம் அது. அக்காலத்தில்தான் 1552ம் ஆண்டில் சாமுராய் Takayama Ukon அவர்கள் பிறந்தார். இவருக்கு 12 வயது நடந்தபோது இவரது தந்தை கத்தோலிக்க விசுவாசத்தைத் தழுவி, தனது மகனுக்கும் திருமுழுக்கு அளித்து, ஜூஸ்தோ எனப் பெயர் சூட்டினார். இவர் கத்தோலிக்கராக மாறினதால், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மறைபோதகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் கத்தோலிக்கத்தை ஏற்கவும் தூண்டினார். 1587ம் ஆண்டில் ஜப்பானிய சான்சிலர் Toyotomi Hideyoshi அவர்கள், கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியபோது, அந்நாட்டில் புதிதாக கத்தோலிக்கத்தை ஏற்றவர்கள் அதைக் கைவிட்டனர். இறையடியார் Takayama அவர்களும், அவரின் தந்தையும், விசுவாசத்தை மறுதலிப்பதற்குப் பதிலாக, சமுதாயத்தில் தாங்கள் வகித்திருந்த மிகப் பெருமைக்குரிய மற்றும் செல்வாக்கு மிகுந்த நிலையைக் கைவிட்டு, ஏழ்மை நிலையையும், நாடு கடத்தப்பட்ட வாழ்வையும் தேர்ந்து கொண்டனர். அவர்களின் நண்பர்கள் பலர் எடுத்துச்சொல்லியும், Takayama விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். Takayama அவர்கள், பிற கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் போராட விரும்பவில்லை, மாறாக, ஏழ்மை வாழ்வைத் தேர்ந்துகொண்டார். ஏனென்றால், ஒரு சாமுராய், தனது தலைவருக்குப் பணிந்து நடக்கவில்லையென்றால், அவர் தான் கொண்டிருக்கும் அனைத்தையும் இழப்பார். இவ்வாறு, கிறிஸ்துவுக்காக, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக, தனது உயர் பதவியையும், செல்வாக்கையும் இழந்து ஏழ்மை வாழ்வையும், கடும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டவர் Takayama. 1614ம் ஆண்டுவாக்கில் ஜப்பானில் கிறிஸ்தவம் முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டபோது இவர், பிலிப்பீன்ஸ் சென்று, 1615ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் இறந்தார். சாமுராய் அவர்களின் ஏழ்மை வாழ்வே, ஜப்பான் கிறிஸ்தவர்க்கு நற்செய்தியாக இருந்தது. இந்த வாழ்வு, நற்செய்தியையும் அறிவித்தது.

"ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பதே இயேசுவின் பணி. இதுவே திருஅவையின் பணியாகும். இதுவே திருஅவையில் திருமுழுக்குப் பெற்ற அனைவரின் பணியாகும். கிறிஸ்தவராக இருப்பதும், மறைப்பணியாளராக இருப்பதும், இவை இரண்டும் ஒன்றே. நற்செய்தியை, வார்த்தை வழி அறிவிப்பதற்கு முன்னர், அதை வாழ்வு வழியாக அறிவிக்க வேண்டும். இதுவே, கிறிஸ்தவர்கள் அனைவரின் கடமையாகும். இயேசு, ஒதுக்கப்பட்டவர்கள், தொலைவில் உள்ளவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு நற்செய்தி அறிவித்தார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது என்பது, ஏழைகளை அணுகிச்சென்று, அவர்களுக்குப் பணிவிடை புரியும் மகிழ்வை அனுபவிப்பது மற்றும் அவர்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதாகும். இவையனைத்தையும் கிறிஸ்துவின் பெயரிலும், அவரின் உணர்விலும் ஆற்ற வேண்டும். ஏனென்றால், கிறிஸ்துவே கடவுளின் நற்செய்தி. கிறிஸ்துவே, கடவுளின் இரக்கம். இவர் தமது ஏழ்மையால் நம்மை வளப்படுத்த நமக்காக ஏழையானவர். கிறிஸ்துவின் திட்டத்திற்கு நாம் விசுவாசமாக இருப்பது, நாம் சமூகப் பணிகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் ஆற்றுவதில் அல்ல, ஆனால், கடவுளின் நற்செய்தியின் வல்லமையை வழங்குவதில் அடங்கும். அன்பெனும் தத்துவத்திற்கேற்ப, இதயங்களை மனம் மாற்றுவதும், குணப்படுத்துவதும், மனித மற்றும் சமூக உறவுகளை மாற்றுவதாகும். உண்மையில், ஏழைகளே, நற்செய்தியின் மையமாவர்". 

அன்பு நேயர்களே, இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார். ஏழைகளுக்குத் தங்கள் சொல்லால் அல்ல, செயலால் நற்செய்தி அறிவிப்பவர்கள் அன்று மட்டுமல்ல, இன்றும் பலர் உள்ளனர். “மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை'' என்ற தலைப்பில் இச்சனிக்கிழமையன்று ஊடகம் ஒன்றில் ஒரு செய்தி பதிவாகியிருந்தது. துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார் அவர்கள், விடுமுறைக்காக, கேரளாவிலுள்ள சொந்த ஊரான Malappuram வந்திருந்தார். Malappuramத்தில் சப்ரினா என்ற உணவகம் மிகவும் புகழ்பெற்றது. இரு நாட்களுக்கு முன், அந்த உணவகத்திற்கு அகிலேஷ்குமார் அவர்கள் உணவருந்தச் சென்றார். தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். அப்போது ஜன்னல் ஓரம் ஒரு சிறுவன், உணவக அறைக்குள் எட்டிப் பார்த்தான். சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தான். அதனைப் பார்த்த அகிலேஷ்குமார், அச்சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார். அச்சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். சிறுவனிடம் என்ன வேண்டுமென்று அகிலேஷ் கேட்க, அவரது தட்டையே காட்டிக் கேட்டான் அவன். உடனே அதுபோல மேலும் இரு சாப்பாடுகளை ஆர்டர் செய்தார் அகிலேஷ். உணவைப் பார்த்ததும் அச்சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கைவைக்கத் தொடங்கினான். அப்போது அவனின் கையை அவனது தங்கையின் பிஞ்சுக் கை தடுத்தது. தனது தங்கை ஏன் தன்னைத் தடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அச்சிறுவன். பின்னர் இருவரும் கை கழுவும் இடத்திற்குச் சென்று கை கழுவி விட்டு வந்தனர். தொடர்ந்து மிகவும் அமைதியாக அமர்ந்து உணவை ருசித்து சாப்பிட்டனர். அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் இருவரும் சிரித்துக் கொள்ளக்கூட வில்லையாம். சாப்பிட்டு முடிந்ததும், அச்சிறுவன் அகிலேஷைப் பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான். பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அண்ணனும் தங்கையும் அமைதியாக உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அதுவரை அகிலேஷ் அச்சிறார்கள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை. பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்தபின், பில் கேட்டுள்ளார். பில்லும் வந்துள்ளது. அதனைப் பார்த்ததும் அகிலேஷின் கண்கள் குளமாகின. பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை. அதில், ''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்''! என்ற வார்த்தைகள் மலயாளத்தில் எழுதப்பட்டிருந்தன.

அன்பர்களே, இது இரக்கத்தின் காலம். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பதற்குச் செயலால் அழைப்பு விடுக்கும் காலம். இச்சிறியோருள் ஒருவருக்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (மத்.10:42) என்று இயேசு சொல்லியிருக்கிறார். மேலும், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள் என்று அந்த இறுதித் தீர்ப்பு நாளில் இயேசு சொல்வார்(மத்.25:35). சனவரி 26, இந்திய குடியரசு தினம். குடியரசு தின விழாவுக்கு ஒத்திகைகள் நடந்து முடிந்துள்ளன. இதில் கலந்து கொள்வதற்கு ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் பிரான்சுவா ஹொலாந்தே அவர்கள் வந்துள்ளார். இந்தியா பல துறைகளில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது. அதேசமயம் இன்னும் இந்தியாவில் களையப்பட வேண்டிய சமூகத் தீமைகளும் உள்ளன.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண், பதினைந்து வயதிலேயே, சொந்தத்தில் வாழ்க்கைப்பட்டு, 16 வயதில் குழந்தையையும் பெற்றார். ஆனால், பிறந்தது பெண் குழந்தை என்பதால், பெண் சிசுவைக் கொன்றுவிடச் சொல்லிக் கணவரிடமிருந்து உத்தரவு வந்ததும் ஆடிப்போய் விட்டார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கணவர் கேட்கவே இல்லை. குழந்தையைக் கொல்லாவிட்டால் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை. ஆனாலும் மிகுந்த துணிச்சலுடன் குழந்தைக்காக மணவாழ்க்கையைத் துறந்து பிறந்த வீட்டுக்குப் போய் விட்டார் அந்த இளம் பெண். கணவரும் அடுத்த கல்யாணத்தை முடித்துக்கொள்ள, மனதில் விழுந்த அடியை மீறி, எப்படியும் வாழ்ந்தே தீருவேன் என்ற மன உறுதியுடனும் சென்னைக்குப் பயணமானார். கல்வியறிவு இல்லாத அந்த இளம் பெண், சென்னையில் சொந்தங்களை நம்பி, தனது மூன்று வயதேயான தன் பெண் குழந்தையுடன் பிழைக்க வந்தார். சென்னையிலிருந்த உறவினர்களும் ஏமாற்றாமல் பாதுகாப்பளித்து, பிழைப்புக்கு ஒரு வழியையும் காட்டினார்கள். வீடுகளில் பணிப்பெண் வேலை தாராளமாகக் கிடைத்தது. ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளில் பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் என்று அயராமல் வேலை செய்து, எல்லாரிடமும் நல்ல பெயரையும் வாங்கினார். கையில் வருமானம் கிடைத்தபின் தன்னம்பிக்கையுடன், உறவினர் வீட்டுக்கு அருகிலேயே, தனியாக ஒரு குடிசையில் வாடகைக்குக் குடியேறினார். மகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். இப்போது அந்தப் பெண் குழந்தை 10-ம் வகுப்பை நிறைவு செய்து ப்ளஸ் ஒன் படிக்கிறார். பெண் குழந்தை வேண்டாமென்று மறுகல்யாணம் செய்து கொண்ட அவரது கணவரின் 2வது மனைவிக்கும் பெண் குழந்தைதானாம். அன்பர்களே, பெண் சிசுக்கொலை, இளவயது திருமணம் இவற்றிக்கெல்லாம் இந்தியாவில் எப்போது விடிவு பிறக்கும்? ஏழைகளின் வாழ்வு எப்போது மகிழ்வடையும்? குடியரசு தின விழா, ஏழைகளுக்கு விடியலைக் கொணரட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.