2016-01-25 15:54:00

திருத்தந்தை-ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது திருஅவையின் பணி


சன.25,2016. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பதே இயேசுவின் பணி. இதுவே திருஅவையின் பணியாகும். இதுவே திருஅவையில் திருமுழுக்குப் பெற்ற அனைவரின் பணியாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார்.

நாசரேத்து தொழுகைக் கூடத்தில் இயேசு திருநூலை வாசித்ததைக் கூறும், இஞ்ஞாயிறு நற்செய்தி பகுதியை மையமாக வைத்து, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நற்செய்தி பகுதி எல்லாருக்குமென அமைந்திருந்தாலும், ஒதுக்கப்பட்டவர்கள், தொலைவில் உள்ளவர்கள் மற்றும் நோயாளிகளையே, சலுகைபெற்ற மக்களாக இயேசு தேர்ந்தெடுத்தார் என்றும் கூறினார்.

ஏழைகள், நற்செய்தியின் மையமாக உள்ளனர் என்றும், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது என்பது, ஏழைகளை அணுகிச்சென்று, அவர்களுக்குப் பணிவிடை புரியும் மகிழ்வை அனுபவிப்பது மற்றும் அவர்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்தவராக இருப்பது, மறைப்பணியாளராக இருப்பது, ஆகிய இவை இரண்டும் ஒன்றே. நற்செய்தியை, வார்த்தை வழி அறிவிப்பதற்கு முன்னர், அதை வாழ்வு வழியாக அறிவிக்கவேண்டும். இதுவே, கிறிஸ்தவர்கள் அனைவரின் கடமையாகும். இவையனைத்தையும் கிறிஸ்துவின் பெயரிலும், அவரின் உணர்விலும் ஆற்ற வேண்டும். ஏனென்றால், கிறிஸ்துவே கடவுளின் நற்செய்தி. கிறிஸ்துவே, கடவுளின் இரக்கம். இவர் தமது ஏழ்மையால் நம்மை வளப்படுத்த நமக்காக ஏழையானவர் என்றும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் திட்டத்திற்கு நாம் விசுவாசமாக இருப்பது, நாம் சமூகப் பணிகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் ஆற்றுவதில் அல்ல, ஆனால், கடவுளின் நற்செய்தியின் வல்லமையை வழங்குவதில் அடங்கும். அன்பெனும் தத்துவத்திற்கேற்ப, இதயங்களை மனம் மாற்றுவதும், குணப்படுத்துவதும், மனித மற்றும் சமூக உறவுகளை மாற்றுவதுமாகும். உண்மையில், ஏழைகளே, நற்செய்தியின் மையமாவர் என்றும் திருத்தந்தை கூறினார்.

நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு அன்னையாக விளங்கும் மரியா, நாம் உலகில் நற்செய்தியை அறிவிப்பதற்கு, கடும் பசியையும், தாகத்தையும் நம்மில் ஏற்படுத்த நமக்கு உதவுவாராக என்று செபித்து, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.