2016-01-25 15:46:00

அருள்பணியாளர்கள், எளிமைப் பண்புள்ளவர்களாக வாழ வேண்டும்


சன.25,2016. அருள்பணியாளர்கள், இரட்டை வாழ்வுமுறையைத் தவிர்த்து, தங்களின் சொந்த விருப்பங்களைத் தேடாமல், எளிமைப் பண்புள்ளவர்களாக வாழ வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று கேட்டுக்கொண்டார். 

மிலான் கர்தினால், ஆஞ்சலோ ஸ்கோலா அவர்கள் தலைமையில் வத்திக்கானுக்கு வருகை தந்திருந்த, வட இத்தாலியின் லொம்பார்தியா மாநில பாப்பிறை குருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மற்றும் மாணவர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித சார்லஸ் பொரோமேயோ அவர்கள் வாழ்வின் சிறப்புக்களையும் எடுத்துச் சொன்னார்.

திருஅவையின் மேய்ப்பர்கள், இறைவனின் பணியாளர்களாகவும், மக்களின், குறிப்பாக, ஏழைகளின் தந்தையராகவும் விளங்க வேண்டுமென்று புனித சார்லஸ் பொரோமேயோ அவர்கள் விரும்பினார் என்றும், இறைவார்த்தையோடு அல்லது பேசுகின்ற இறைவனோடு தொடர்ந்து உரையாடல் நடத்துபவர்களே வாழ்வின் வார்த்தையை அறிவிக்க முடியும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

லொம்பார்தியா மாநில பாப்பிறை குருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு, தன்னைச் சந்திக்க வந்த அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவரிடம் பேசிய திருத்தந்தை, தனது ஆயரோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்து, அவரோடு உரையாடல் நடத்தி, காரியங்களை அவரோடு சேர்ந்து தேர்ந்து தெளிவது ஒரு நல்ல அருள்பணியாளருக்குரிய அடையாளம் என்று கூறினார்.

ஆன்மீக மனிதர்கள், இரக்கத்தின் மேய்ப்பர்கள், ஆண்டவர் அன்பில் ஆழமாக ஒன்றித்திருப்பவர்கள், எளிமையான வாழ்வால் நற்செய்தியின் மகிழ்வைப் பாதுகாக்கும் திறன் உள்ளவர்கள் ஆகிய பண்புள்ளவர்களாக, இன்றைய மற்றும் நாளைய அருள்பணியாளர்கள் வாழுமாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சிறப்பாக, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பிற பாகங்களிலிருந்து இக்குருத்துவக் கல்லூரியில் பயிலும் குரு மாணவர்களைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் பிறரோடு நட்புறவைக் கொண்டிருந்து, குருத்துவ உடன்பிறப்பு உணர்வை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.