2016-01-23 14:21:00

பொதுக்காலம் 3ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


சனவரி 17, கடந்த ஞாயிறன்று, ரோஹித் வெமுலா (Rohith Vemula) என்ற மாணவர், தற்கொலை செய்துகொண்டதால், இந்தியாவில், 'சாதிப் போர்' மீண்டும் ஒருமுறை துவங்கியுள்ளது. இந்த வேதனை நிகழ்வு, ஓர் உயர் கல்விக்கூடத்தில் நிகழ்ந்தது என்பது, சில உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. 'சாதி'யை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள், அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தாத இடமே இல்லை என்பதைத்தான், ரோஹித் அவர்களின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. இந்த மரணத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், அரசியல்வாதிகள், இளையோரை இலக்காக்கி, வேட்டையாடி வருவது, பெரும் வேதனையே! இறைவன் பெயரால் இயங்கிவரும் நிறுவனங்களும் 'சாதிய அரசியலில்' சிக்கித் தவிப்பதை நாம் அறிவோம். இத்தகைய ஒரு சூழலில், நாம் இன்றைய ஞாயிறு சிந்தனையை மேற்கொள்கிறோம்.

‘அரசியல்’ என்ற சொல்லைக் கேட்டதும், ‘கட்சி அரசியலே’ நம் எண்ணங்களை ஆக்ரமிப்பதால், கோவிலில், வழிபாட்டு நேரத்தில் (ஞாயிறு சிந்தனையில்) அரசியல் பேச வேண்டாமே என்று சொல்லத் தோன்றுகிறது. வாழ்வையும், வழிபாட்டையும் பிரித்துப் பார்க்கும் நமது மனநிலைக்கு, இன்றைய நற்செய்தி ஒரு சவாலாக அமைகிறது. இயேசு, தொழுகைக் கூடத்தில் நின்று, ‘அரசியல்’ பேசுவதை, இன்றைய நற்செய்தியாக வாசிக்கிறோம். ஆனால், இங்கு நாம் குறிப்பிடும் ‘அரசியல்’ என்ற வார்த்தையின் பொருள்... அரசு+இயல்... நம்மை நாமே ஆள்வது எப்படி என்ற பாடம்.

இந்தக் கண்ணோட்டத்தில், இரு வரலாற்று நினைவுகள் நமது ஞாயிறு சிந்தனைக்கு அடித்தளமாக அமைகின்றன. முதல் வரலாற்று நினைவு... இந்தியக் குடியரசு நாள். 1950ம் ஆண்டு, சனவரி 26ம் தேதி, இந்தியாவில் முதல் குடியரசு நாள் கொண்டாடப்பட்டது. வருகிற செவ்வாய்க்கிழமை, 67வது குடியரசு நாளை, கடைபிடிக்கவிருக்கிறோம். முதல் குடியரசு நாள் ‘கொண்டாடப்பட்டது’ என்று சொன்னேன். 67வது குடியரசு நாளை கொண்டாடவிருக்கிறோம் என்று சொல்லாமல்,  கடைபிடிக்கவிருக்கிறோம் என்று சொன்னேன். இந்த வார்த்தை வேறுபாடே, நான் சொல்லவரும் எண்ணங்களைத் தெளிவாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். இன்றைய இந்தியாவில், 'குடியரசு' என்பது, ஒப்புக்காக, கடமைக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகிவிட்டதால், 'குடியரசு நாள்' என்பதும், ஒரு கடமையாகக் கடைபிடிக்கப்படுகிறது.

‘குடியரசு’ அல்லது ‘மக்களாட்சி’ என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது, அமெரிக்க அரசுத் தலைவர், ஆபிரகாம் லிங்கன் அவர்கள் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள், மனதில் ஒலிக்கின்றன: “Democracy is a government of the people, by the people and for the people.” “மக்களாட்சி என்பது, மக்களுடைய ஆட்சி; அது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி.”

மக்களாட்சியின் உயிர் துடிப்பாக இருக்கவேண்டிய மக்களை, குறிப்பாக, சாதியக் கொடுமையாலும், சமுதாயப் பாகுபாடுகளாலும் உரிமைகளை இழந்து வாடும் மக்களை, நடைப்பிணங்களாய் மாற்றி, சமுதாயத்தின் ஓரங்களில் புதைத்துவிட்டு, மந்திரிகளையும், பண முதலைகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் நாட்டின் மையத்திற்குக் கொண்டுவரும்போது, அங்கு நடப்பது, மக்களாட்சியா என்ற கேள்வி எழுகிறது. இந்த அவலமான போக்கு, இந்தியாவில் மட்டும் உள்ளதென்று வேதனையடைய வேண்டாம். உலகின் அனைத்து நாடுகளிலும், மக்களாட்சி என்ற பெயரில், பல அவலங்கள் அரங்கேறி வருவதை நாம் காண்கிறோம்.

நாம் சிந்திக்கும் இரண்டாவது வரலாற்று நினைவு நாள் - ஒவ்வோர் ஆண்டும், சனவரி 27ம் தேதி கடைபிடிக்கப்படும் 'அகில உலக தகன நினைவு நாள்' (International Holocaust Remembrance Day). இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்ட நாத்சி வதை முகாம்களிலேயே, மிகப் பெரிய, Auschwitz-Birkenau முகாம்களில் இருந்தோரை, 1945ம் ஆண்டு சனவரி 27ம் தேதி, இரஷ்யப் படையினர் விடுவித்தனர். இந்நாளின் நினைவாக, சனவரி 27ம் தேதி ‘அகில உலக தகன நினைவு நாள்’ எனக் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியக் குடியரசு நாளும், அகில உலக தகன நினைவு நாளும் சில அடிப்படை உண்மைகளை உணர்த்துகின்றன. மனிதர்கள் இன்னும் தங்களைத் தாங்களே ஆளும் திறமை பெறவில்லை, இன்னும் நாம் முழு விடுதலை அடையவில்லை என்ற உண்மைகளை உரக்கக் கூறும் நாட்கள் இவை!

பல வடிவங்களில் தளையுண்டிருக்கும் மனிதர்களுக்கு விடுதலை வழங்கவே, தான் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளதாக இன்றைய நற்செய்தியில் முழங்குகிறார், இயேசு. தன் பணிவாழ்வின் துவக்கத்தில், அவர் ஆற்றிய முதல் உரை, லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது” என்று ஆரம்பமாகும் நற்செய்தி வார்த்தைகள், துறவியர், அருள்பணியாளர், மக்கள் பணிகளில் ஈடுபடுவோர் பலருக்கும் உந்துசக்தியாக விளங்குகின்றன. பல அழைப்பிதழ்களிலும், பாடல்களிலும் இந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதை நாம் காணலாம். மனதைத் தூண்டும் இவ்வார்த்தைகள், இயேசு தன் பணிவாழ்வைத் துவக்கியபோது அறிவித்த 'கொள்கை விளக்க அறிக்கை' (Manifesto)!

கொள்கை விளக்க அறிக்கை என்பது, தற்போது ஓர் அரசியல் ஆயுதமாக, தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. தேர்தல் முடிந்ததும், அந்தச் சொற்கள் மக்கள் நினைவுகளிலிருந்து மறைந்துவிடும் என்ற நம்பிக்கையில், அரசியல் தலைவர்கள், ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் மட்டும், இந்த ஆயுதத்தைத் தூசித் துடைத்து, மக்கள் மீது ஏவி வேடிக்கை காட்டுகின்றனர்.

இன்னும் சில் மாதங்களில் தமிழ்நாட்டிலும், இவ்வாண்டு இறுதியில் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் தேர்தல்கள் நடைபெறப் போகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெறப்போகும் அரசுத் தலைவர் தேர்தல், நம் தொலைக்காட்சிகளில் வரும் 'மெகா சீரியல்' போல, ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வருகின்றது. இன்னும் சில நாட்களில், அல்லது, வாரங்களில் இதே போன்றதொரு 'மெகா சீரியல்' தமிழ்நாட்டில் துவங்க உள்ளது. நமது மூளையை மழுங்கடித்துவிட்டு, உணர்வுகளைத் தூண்டிவிடும் தொலைக்காட்சித் தொடர்களைப் போலவே, அரசியல் தலைவர்களின் பின்னணி, அவர்கள் சொல்லும் மதியற்ற கூற்றுகள் ஆகியவற்றைக் கேட்கும் கட்டாயத்திற்கு நாம் உள்ளாகப் போகிறோம்.

பல அரசியல் தலைவர்களின் உரைகளைக் கேட்கும்போது, என் மனம் 'ஸ்டீரியோ' பாணியில் வேலை செய்வதை உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கும் இதையொத்த அனுபவம் இருந்திருக்கும். அதாவது, தலைவர்களின் கூற்றுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், நமது மனங்கள், அக்கருத்துக்களை ஏற்று, அல்லது, மறுத்து, பேசிக் கொண்டேயிருக்கும். பெரும்பாலும் மறுப்பு ஒலிகளே நம் மனதில் அதிகம் எழும். இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது... உரையாற்றும் தலைவருக்கும், அவரது பேசும் கூற்றுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள். “இவரை நமக்குத் தெரியாதா? இவர் சொல்வதற்கும், இவரது வாழ்வுக்கும்  தொடர்பில்லையே!” என்ற எண்ணங்கள் 'ஸ்டீரியோ' பாணியில் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தில் நாசரேத்து தொழுகைக் கூடத்தில் துவக்க உரையாற்றினார். தன் 'கொள்கை விளக்க அறிக்கை'யை மக்களுக்கு அளித்தார். - லூக்கா நற்செய்தி 4 16-21. இயேசுவின் இந்த அற்புத உரையைப் பல்வேறு கோணங்களில் நாம் சிந்திக்கலாம். இன்றைய நற்செய்தியின் இறுதியில் அவர் சொல்லியிருக்கும் ஒரே ஒரு கூற்றை மட்டும் சிறிது ஆழ்ந்து சிந்திக்க உங்களை அழைக்கிறேன்... “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்று இயேசு தன் உரையை நிறைவு செய்கிறார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள், ‘நாளை நல்ல காலம் பிறக்கும்’ என்று கனவு காண்பதற்கு அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம், இயேசு அந்தத் தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை: "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று." இன்று, இப்போது, இங்கு... நிறைவு, விடிவு, மீட்பு வந்துவிட்டது என்று இயேசு கூறினார். தான் கூறியதை நம்பியவர்; வாழ்ந்தும் காட்டியவர், இயேசு.

இயேசு உலகில் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம் அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவற்றைச் சிந்தித்தால், அவர் நிகழ்காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சில...

நாம் கடந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்து கொண்ட கானா திருமணப் புதுமை, இயேசு செய்த முதல் அருங்குறி என்று சொல்லப்படுகிறது. அந்தப் புதுமையில், தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியதைக் குறிக்க அவர் சொன்ன வார்த்தைகள்: (யோவான் 2:8) "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்." அவர் செய்த முதல் புதுமையிலேயே இப்போது என்ற எண்ணத்தை விதைத்தார்.

லூக்கா நற்செய்தியில் பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும்போது, “நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள்” என்று சொல்லாமல், (லூக்கா 17:14) “நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காட்டுங்கள்” என்றார். இயேசு இப்படி சொன்னபோது, தொழுநோய் அவர்களை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போதே நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள்; போகும் வழியில் குணமடைந்தார்கள். இதேபோல், (மத்தேயு 9:6) இயேசு, முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு உடனே நடக்கச் சொன்னார். பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையில் (லூக்கா 9:13, மாற்கு 6:38) நகருக்குச் சென்று உணவு வாங்கி வரலாமா என்ற எதிர்காலத் திட்டம் தீட்டிய சீடர்களிடம், "உங்களிடம் இங்கே எவ்வளவு உணவிருக்கிறது?" என்ற கேள்வியுடன் அந்தப் புதுமையை ஆரம்பித்தார்.

இயேசு சொல்லித்தந்த அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்." என்றா சொல்லித்தந்தார்? இல்லையே. மாறாக, இன்றே தாரும் என்றார். இன்று இப்போது என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில் தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். (லூக்கா 23:43) "இன்றே என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று இயேசு கூறியது அவரது இறுதி வாக்கியங்களில் ஒன்று.

இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு விரக்தியுடன், “என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம்” என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது.  ‘நிகழ் பொழுதின் அருள்’ என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஈடுபாட்டுடன் செய்தால், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், உண்மையான விடுதலை பெறமுடியும். நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது, மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிகப் பயன் தரும்.

நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் இயேசு வாசித்த ஏசாயாவின் சொற்கள், பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக்கூடியவை; அவற்றைப் பற்றி சிந்திக்காமல், இன்று, இப்போது என்று நாம் சிந்தித்தது, இன்றைய நற்செய்திக்குத் தகுந்த விளக்கம் இல்லையோ என்று உங்களில் ஒரு சிலர் தயங்கலாம். 

உடலளவிலும், மனதளவிலும் கட்டுண்டு கிடந்த மனித சமுதாயத்தை விடுவிக்கவே தான் வந்ததாக, இயேசு கூறிய இந்த வார்த்தைகளுக்கு விளக்கங்கள் தேவையில்லையே! சமுதாய நீதி  பற்றிய கனவுகள், என்றாவது, எப்போதாவது, நனவாகுமா என்று, ஏக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இன்றே, இப்போதே அவை நனவாகிவிட்டன, நிறைவேறிவிட்டன என்று இயேசு சொன்ன வார்த்தைகள், நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும் என்றல்ல, இப்போதே வந்துவிட்டது என்று அவர்களை நம்பவைக்க இயேசு முயன்றது, அவரது முதல் ‘அரசியல்’ வெற்றி என நான் கருதுகிறேன்.

இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால்... அவ்வண்ணமே நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால், சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும் குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல்பட்டு தீர்வுகளைக் கண்டால், உண்மை விடுதலை, தூரத்துக் கனவாக இருக்காது.

ஒன்றே செய்யினும், நன்றே செய்வோம்;

நன்றே செய்யினும், இன்றே, இப்போதே செய்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.