2016-01-23 15:32:00

சிங்கப்பூரில் பல்சமய உரையாடலுக்கு விண்ணப்பம்


சன.23,2016. சிங்கப்பூரில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், ஒன்றிணைந்து வராமல், ஒவ்வொருவரும், மற்றவரைவிட்டு விலகிச் சென்று வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர் அந்நாட்டு சமயத் தலைவர்கள்.

சிங்கப்பூரில், பல்சமய உறவுகள் குறித்து இவ்வாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சமயத் தலைவர்கள், கல்வி மற்றும் சமயக் கல்வி வழியாக, மதங்கள் மத்தியில் நல்லுறவுகள் வளர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல்களும், பிரிவினைவாதப் போக்குகளும் அதிகரித்துவரும் இன்றைய உலகில், மதங்களிடையே புரிந்துகொள்தலை வளர்ப்பதற்கு பல்சமய உரையாடல் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்று சமயத் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய சிங்கப்பூர் பேராயர் வில்லியம் கோ அவர்கள், கத்தோலிக்கர், பிற சமயத்தவரோடு பழகும்போது, மாறுபாடுகளை நோக்காமல், மதங்கள் மத்தியில் நிலவும் பொதுவான கூறுகளை நோக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

2010ம் ஆண்டின் விபரங்களின்படி, சிங்கப்பூரில் புத்த மதத்தினர் 33 விழுக்காடு,  கிறிஸ்தவர்கள் 18.3 விழுக்காடு, முஸ்லிம்கள் 14.7 விழுக்காடு, தாவோயிச மதத்தினர் 10.9 விழுக்காடு, இந்து மதத்தினர் 5.1 விழுக்காடு, பிற மதத்தினர் 0.7 விழுக்காடு மேலும், எந்த மதத்தையும் சாராதவர்கள் 17 விழுக்காடு ஆகும்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.