2016-01-22 16:05:00

திருமணம் ஒருசிலருக்கென குறிக்கப்பட்டுள்ள இலக்கு அல்ல


சன.22,2016. திருமணம் குறித்த திருஅவையின் போதனை, ஒருசிலருக்கென குறிக்கப்பட்டுள்ள இலக்கு அல்ல, ஆனால், கிறிஸ்துவின் அருளால் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அனுபவிக்கக் கூடிய ஒரு நடைமுறை வாழ்வாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ரோமன் ரோட்டா எனப்படும் திருஅவையின் திருமணம் சார்ந்த உச்ச நீதிமன்றத்தின்  புதிய ஆண்டை தொடங்கி வைத்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமணத்தின் நீதிமன்றம் என்ற முறையில் இதன் பணி, புனிதப் பிணைப்பின் உண்மையின் நீதிமன்றம் என்ற முறையில் இதன் பணி இவையிரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று கூறினார்.

ரோமன் ரோட்டா அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்கு, குறிப்பாக, பாவம் மற்றும் வாழ்வின் சோதனைகளால் காயமடைந்துள்ள குடும்பங்களுக்கு, இறைவனின் மாறாத இரக்கமுள்ள அன்பை திருஅவை காண்பிக்க முடியும், அதேநேரம், இறைவனின் திட்டப்படி, திருமணத்தின் முக்கியமான உண்மையை அறிவிக்கின்றது என்றும் கூறினார்.  

இறைவனின் திட்டப்படியான குடும்பத்திற்கும், மற்ற எந்த வகையான பிணைப்புகளுக்கும் இடையே எந்தக் குழப்பமும் இல்லை என்பதை, நடந்து முடிந்த இரு உலக ஆயர்கள் மாமன்றங்களும் உலகுக்கு அறிவித்துள்ளன என்றும் கூறிய திருத்தந்தை, திருஅவை, புதுப்பிக்கப்பட்ட பொறுப்புணர்வுடன், திருமணத்தின் முக்கிய கூறுகளைத் தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். ரோமன் ரோட்டா உச்ச நீதிமன்றம், பெரும்பாலும் திருமண முறிவுகள் குறித்த வழக்குகளையே கையாள்கிறது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.