2016-01-22 15:44:00

சொல்,செயல் அனைத்திலும் கடவுளின் பரிவன்பு வெளிப்படவேண்டும்


சன.22,2016. காயப்பட்ட உறவுகளைக் குணமாக்கவும், குடும்பங்களிலும், சமூகங்களிலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் இரக்கத்தின் வல்லமையை நன்மனம் கொண்ட அனைவரும் மீண்டும் கண்டுணருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“சமூகத் தொடர்பும் இரக்கமும் : ஒரு பலனுள்ள சந்திப்பு” என்ற தலைப்பில், ஐம்பதாவது உலக சமூகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியில், திருஅவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத் துறைகளில் உள்ளவர்களின் சொல், செயல் ஒவ்வொன்றும், கடவுளின் பரிவன்பு, கனிவு, மன்னிப்பு ஆகியவற்றை எல்லாருக்கும் வெளிப்படுத்துவதாய் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமூகத் தொடர்புகள், பாலங்களைக் கட்டும் சக்தியைக் கொண்டிருப்பதால், அது சமுதாயத்தை வளப்படுத்துகின்றது என்றும், புரிந்துகொள்ளாமையைத் தவிர்க்கவும், காயப்பட்ட நினைவுகளைக் குணமாக்கவும், அமைதியையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பவும் எடுக்கப்படும் முயற்சியில், மக்கள் தங்கள் வார்த்தைகளையும், செயல்களையும் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தினால் எத்துணை அழகாக இருக்கும் என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிறுவனங்கள், அரசியல் மற்றும் பொதுவான கருத்துக்களை உருவாக்குவதற்குப் பொறுப்பானவர்கள், தங்களுக்கு முரணாகச் சிந்திப்பவர்கள், அல்லது செயல்படுபவர்கள் அல்லது தவறிழைப்பவர்கள் பற்றிப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதேபோல், திருஅவையின் மேய்ப்பர்கள் என்ற வகையில், நாம் தொடர்பு கொள்ளும் முறையிலும், நம் பணியிலும், பகைவரை வெற்றி கண்டுவிட்டோம் என்ற பெருமிதம் இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, வாழ்வின் இன்னல்களை எளிதாக்கவும், எப்போதும் தீர்ப்பிட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கனிவை வழங்கவும் இரக்கம் என்ற பண்பு உதவட்டும் என்றும் கூறியுள்ளார்.

நேர்மையாளரிடமிருந்து பாவிகளை முழுவதுமாக ஒதுக்கி வைக்கும் நம் எண்ணப்போக்கைத் தவிர்ப்பதற்கு நாம் கொள்ளும் தொடர்புகள் உதவட்டும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, வன்முறை, ஊழல், தவறாகப் பயன்படுத்தல் போன்ற பாவச் சூழல்களை நாம் தீர்ப்பிட வேண்டும், ஆனால் தனிப்பட்ட மனிதர்களை அல்ல, ஏனென்றால், கடவுளால் மட்டுமே நம் இதயங்களின் உள்ளாழத்தை அறிய முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் எப்போதும் திறந்திருக்கின்ற மற்றும் தாங்கள் வரவேற்கப்படுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு குடும்பமாக அல்லது ஓர் இல்லமாக இந்த சமுதாயத்தை அமைக்குமாறு கேட்டுள்ள திருத்தந்தை, இதற்குச் செவிமடுத்தல் மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், SMS குறுஞ்செய்திகள், உரையாடல்கள் போன்றவை, மனிதரிடையே தொடர்புகளை ஏற்படுத்துவன, ஆனால் இத்தொடர்புகள் உண்மையானதா, இல்லையா என்பதை இத்தொழில்நுட்பம் நிர்ணயிப்பதில்லை, மாறாக, மனித இதயமே அதனை உறுதி செய்கின்றது என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த யூபிலி ஆண்டு, எல்லாரும் இரக்கப் பண்பில் வாழவும், ஒருவர் ஒருவரை நன்றாக அறிந்து, புரிந்துகொள்வதற்கு உறுதியான உரையாடலை ஊக்குவிக்கவும் உதவும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற மே 8ம் தேதி சிறப்பிக்கப்படும் ஐம்பதாவது உலக சமூகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தி, இவ்வெள்ளியன்று வத்திக்கான் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.