2016-01-22 15:58:00

ஓர் ஆயர் செபிக்கவில்லையெனில், இறைமக்கள் துன்புறுவார்கள்


சன.22,2016. செபிப்பதும், உயிர்த்த இயேசுவை அறிவிப்பதுமே ஓர் ஆயரின் கடமை,  ஓர் ஆயர் செபிக்காமலும், நற்செய்தியை அறிவிக்காமலும் இருந்துகொண்டு, மற்ற காரியங்களில் ஈடுபட்டிருப்பார் எனில், இறைமக்கள் துன்புறுவார்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

இயேசு, பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தது பற்றிக் கூறும் இவ்வெள்ளி  திருப்பலி நற்செய்தி (மாற்.3:13-19) வாசகத்தை மையப்படுத்தி மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, பன்னிரு திருத்தூதர்களும் முதல் ஆயர்கள் என்று கூறினார்.

யூதா இஸ்காரியோத் இறந்த பின்னர் மத்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார், அதுவே திருஅவையில் நடந்த முதல் ஆயர் திருநிலைப்பாடு, ஆயர்கள், திருஅவையின் தூண்கள், அவர்கள், உயிர்த்த இயேசுவுக்குச் சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளார்கள்  என்றும் கூறினார் திருத்தந்தை.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றியத் திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இயேசு வாழ்கிறார், இயேசு ஆண்டவர் உயிர்த்தெழுந்தார், அவர் நம்மோடு நடக்கிறார், அவர் நம்மை மீட்கிறார், அவர் நம் நம்பிக்கை, அவர் நம்மை எப்போதும் ஏற்று மன்னிக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆயர் இல்லாமல் திருஅவை இயங்க முடியாது, இதனால் நம் ஆயர்களுக்காகச் செபிப்பது நம் அனைவரின் கடமை, இது அன்பின் கடமை என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை, நாமும் பாவிகள், நாமும் பலவீனர்கள் என்றும் கூறினார்.

ஆண்டவரே, உண்மையான சாட்சிகளாக வாழும் ஆயர்களை எங்களுக்குத் தாரும் என்று செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் தங்களின் போதனைகளால் நற்செய்தியை நாம் புரிந்துகொள்ள உதவுகின்றனர், இந்த நம் ஆயர்களுக்காகச் செபிப்போம் என்று கூறி மறையுரையை நிறைவு செய்தார்.

மேலும், “மன்னிப்பது அரிதாகக் காணப்படும் இன்றைய சமுதாயத்தில், இரக்கம், எப்போதும் மிக முக்கியமாக உள்ளது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.