2016-01-21 16:27:00

மதுரையில், மரங்களில் ஆணி அடித்தால் ரூ 5,000 அபராதம்


சன.21,2016. மதுரையில் சாலையோர மரங்களைக் காப்பாற்ற மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை இணைந்து, போலீஸார் ஒத்துழைப்புடன், மரங்களில் இனி ஆணி அடித்தால், மரத்துக்கு ஏற்படும் சேதத்தைப் பொருத்து ரூ. 300 முதல் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற பெருநகரங்களில் சாலைகள் ஒருபுறம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், இந்நகரங்களில் மரங்கள் பாதுகாக்கப்படுவதால் அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலைகள் அதிக அளவு உள்ளன.

அதுபோல, ஒரு காலத்தில் அடர்ந்த மரங்கள், தரமான நிலத்தடி நீர், சுகாதாரமான காற்றுள்ள சுற்றுச்சூழல் மதுரையில் நிலவியது. நாளடைவில் வளர்ச்சி என்ற போர்வையில் சாலைகள், கட்டிடங்களுக்காக மதுரை நகர், புறநகர் மற்றும் கிராமப் பகுதி சாலையோர மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டன. தற்போது சாலையோர மரங்கள் குறைந்த மாவட்டமாக மதுரை மாறிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக ,மதுரை நகர் பகுதி சாலைகளில் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் தங்களுடைய நிறுவன விளம்பர பதாகைகளை மரங்களில் ஆணி அடித்து தொங்கவிடும் போக்கு அதிகரித்துவிட்டது.

இதுகுறித்து உயிரியல் பேராசிரியர் ராமசுப்பு கூறியதாவது: மரங்களில் ஆணி அடிப்பதால் நுண்ணுயிர் தொற்று அதிகமாகி, மரம் அழிவதற்கு முக்கிய காரணமாகிறது. மரங்களில் இருக்கும் உணவுக் குழாய்களில் ஓட்டை விழுந்து மரத்தின் வளர்ச்சி தடைபடுகிறது. பக்கவாட்டில் கிளைகள் வளராமல் இறந்துவிடும். ஒரு மரத்தில் 10 ஆணி அடித்தால் அந்த மரம் இறந்துவிடும் என்றார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.