2016-01-21 15:26:00

மக்களை வரவேற்பதே, திருத்தலப் பொறுப்பாளர்களின் முதல் பணி


சன.21,2016. எளிய மக்களின் உன்னதமான சாட்சியம் நம்மிடையே உள்ள திருத்தலங்கள்; பல தலைமுறையினரின் பக்தியை வெளிப்படுத்துவன இத்திருத்தலங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, திருப்பயணங்களை ஏற்பாடு செய்யும் ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு திருத்தலங்களின் பொறுப்பாளர்கள் என 3000த்திற்கும் அதிகமானோரை, இவ்வியாழனன்று, திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, திருத்தலங்களும், திருப்பயணங்களும் கிறிஸ்தவ பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அம்சம் என்று கூறினார்.

திருத்தலங்களுக்கு வரும் மக்கள் ஏதோ கூட்டத்தோடு கூட்டமாக வருபவர்கள் என்று எண்ணுவது தவறு, மாறாக, அவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஆன்மீகத்தை மனதில் சுமந்து வருபவர்கள் என்று தன் உரையில் தெளிவுபடுத்தினார், திருத்தந்தை.

பழைய ஏற்பாட்டின், சாமுவேல் முதல் நூலில் (1 சாமுவேல் 1,12-14) குழந்தைப் பேறு இன்றி வாடும் அன்னா, தன் குறைகளை வெளிப்படுத்தி கண்ணீரோடு வேண்டியபோது, குரு ஏலி, அவரைத் தவறாகப் புரிந்துகொள்வதை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, திருத்தலங்களைத் தேடி வரும் எளிய மக்களின் பக்தியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தங்கள் இல்லத்திற்குள் செல்லும் உணர்வுடன், திருத்தலங்களில் நுழையும் மக்களை வரவேற்பதே, திருத்தலப் பொறுப்பாளர்களின் முதல் பணி என்பதை வலியுறுத்த, திருத்தூதர் பவுல், உரோம் நகரில் தங்கியிருந்தபோது, 'தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்றார்' (தி.ப. 28,30) என்று, இந்நூலின் இறுதியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவுபடுத்தினார்.

பல வேளைகளில், திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், களைப்புடனும், பசியுடனும் அங்கு வந்து சேருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, உடலாலும், உள்ளத்தாலும் சோர்வுற்று வரும் பக்தர்களை, ஒரு குடும்பத்திற்குள் வரவேற்கும் மனநிலையுடன், திருத்தலப் பொறுப்பாளர்கள் செயல்படுவதே தலைசிறந்த பணி என்று எடுத்துரைத்தார்.

திருத்தலங்களில் ஒப்புரவு அருளடையாளம் வழங்க வரும் அருள் பணியாளர்கள், இரக்கத்தால் நிறைந்த உள்ளத்துடன், ஒரு பெற்றோருக்கு உரிய கனிவுடன் இந்த யூபிலி ஆண்டில் பணியாற்ற வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.