2016-01-21 16:27:00

நாட்டை இணைக்க நமது ஒரே கருவி, செபமே புர்க்கினா ஃபாசோ ஆயர்கள்


சன.21,2016. புர்க்கினா ஃபாசோ நாட்டை ஒன்றிணைக்க நாம் பயன்படுத்தும் ஒரே கருவி, செபமே என்று புர்க்கினா ஃபாசோ மற்றும் நைஜர் நாடுகளின் ஆயர்கள் ஒருங்கிணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர் என்று ஃபிதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

புர்க்கினா ஃபாசோவில் அண்மையில் நிகழ்ந்த ஒரு தீவிரவாதத் தாக்குதலில் 30 பேர் இறந்துள்ளதையும், இரு மருத்துவர்கள் கடத்தப்பட்டுள்ளதையும் தொடர்ந்து, ஆயர்கள் விடுத்துள்ள இந்த அறிக்கையில், செபம் ஒன்றே தங்களிடம் உள்ள சக்தி வாய்ந்த கருவி என்று கூறியுள்ளனர்.

Ouagadougouவில் நிகழ்ந்துள்ள வன்முறை, புர்க்கினா ஃபாசோ நாட்டைத் துன்புறுத்தியுள்ள ஒரு காயம் என்று கூறியுள்ள ஆயர்கள், இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும், அவர்கள் குடும்பங்களையும், வன்முறையை மேற்கொண்டவர்களையும் இறைவன் குணமாக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலும்,  புர்க்கினா ஃபாசோ தலைநகர் Ouagadougouவிலும் இடம்பெற்ற கடும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர்க்கு, கடந்த ஞாயிறு மூவேளை செப உரையின் போது, தனது செபங்களைத் தெரிவித்த திருத்தந்தை, உலக அமைதிக்காகவும் விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.