2016-01-21 15:13:00

திருத்தந்தையின் மறையுரை - பொறாமையின் விளைவுகள்


சன.21,2016. சனவரி 21, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட புனித ஆக்னெஸ் திருநாளன்று, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொறாமை என்ற பாவத்தின் விளைவுகளைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இளையவர் தாவீது அடைந்த புகழால் மனம் புழுங்கி, அவர் மீது பொறாமை கொண்ட மன்னன் சவுலைக் குறித்து முதல் வாசகத்தில் (1 சாமுவேல் 18: 6-9; 19: 1-7) கூறப்பட்டுள்ள நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.

ஒரு களையைப் போல் உள்ளத்தில் வளரும் பொறாமை, மனதில் தோன்றும் பல்வேறு நல்ல பண்புகளை வளரவிடாமல் தடுத்து, நம் மனதை மரணத்திற்கு இட்டுச் செல்கிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நமது குடும்பங்களிலும், குழுமங்களிலும், சமுதாயத்திலும் பொறாமை என்ற நோயினால், பலரை நாம் கொன்றுள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை, இந்த நோயிலிருந்து நம்மை விடுவிக்க இறைவனை நாடுவோம் என்று கேட்டுக்கொண்டார்.

மதத் தலைவர்கள் வளர்த்துக்கொண்ட பொறாமையால், இயேசுவை அவர்கள் சாவுக்கு கையளித்தனர் என்று கூறியத் திருத்தந்தை, பொறாமையின்  காரணமாக யாரையும் அழிவுக்குக் கையளிக்கும் பாவத்திலிருந்து இறைவன் நம்மைக் காக்க வேண்டுவோம் என்ற விண்ணப்பத்துடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.