2016-01-20 15:42:00

சுய அழிவைச் சந்திக்கும் ஆபத்தில் மனித இனம் - பேரா. ஹாகிங்


சன.20,2016. மனித இனம், தானே உருவாக்கிய தொடர்ச்சியான ஆபத்துக்களால் அழிவை சந்திக்கலாம் என்று அறிவியல்துறையின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் (Prof Stephen Hawking) அவர்கள் எச்சரித்திருக்கிறார்.

அணு ஆயுதப்போர், புவி வெப்பமாதல் மற்றும் மரபணு மாற்றி அமைக்கப்பட்ட வைரஸ்கள் ஆகிய மூன்று காரணிகளை பேராசிரியர் ஹாகிங் அவர்கள் குறிப்பான ஆபத்துக்களாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஏற்படக்கூடிய எதிர்கால முன்னேற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் தவறாகப் போவதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்டவெளியின் கருந்துளைகள் (Black holes) பற்றிய விரிவான ஆய்வுகள் குறித்து அவர் உரை நிகழ்த்தியபோது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கூறிய பதிலில், பேராசிரியர் ஹாகிங் அவர்கள், இக்கருத்துக்களை தெரிவித்தார்.

மனித இனம் எதிர்காலத்தில் வேறு உலகங்களில் சென்று குடியேற்றங்களை அமைப்பது சாத்தியமானால் அழிவில் இருந்து தப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அறிவியல்துறையின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் அவர்கள், அறிவியல் துறையின் முன்னேற்றங்களே மனித இனத்துக்கான புதிய ஆபத்துக்களை உருவாக்கக்கூடும் என்று கூறுவது, சுயமுரணாக சிலரால் கருதப்படுகிறது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.