2016-01-20 15:33:00

சனவரி 26 திருத்தந்தையின் தவக்காலச் செய்தி வெளியீடு


சன.20,2016. சனவரி 25, வருகிற திங்களன்று, திருத்தூதர் பவுல் அடியாரின் மனமாற்ற விழா  கொண்டாடப்படுவதையொட்டி, மாலை 5.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் மாலை செப வழிபாடு, புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனமாற்ற விழாவையொட்டி, சனவரி 18 முதல் 25 முடிய கிறிஸ்தவ ஒன்றிப்பு மன்றாட்டு வாரம் நடைபெற்று வருகிறது.

“உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி” (1 பேதுரு 2:9) என்று புனித பேதுருவின் முதல் திருமடலில் காணப்படும் வார்த்தைகள், இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு மன்றாட்டு வாரத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு தவக்காலத்திற்காக உருவாக்கியுள்ள செய்தி, திருத்தந்தையின் பிறரன்புச் செயல்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள 'Cor Unum' அவையின் உறுப்பினரான, கர்தினால் Francesco Montenegro அவர்களால், சனவரி 26, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஓர் அங்கமாக விளங்கும் தவக்காலத்திற்கென, "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்தேயு 9:13) என்ற தலைப்பில், திருத்தந்தை வழங்கும் செய்தி அமைத்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனவரி 20, இப்புதன் காலை 9 மணியளவில், உரோம் நகரின் தலைமை மசூதியைச் சேர்ந்த இஸ்லாமியத் தலைவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்து, தங்கள் மசூதிக்கு திருத்தந்தை வருகை தரவேண்டும் என்ற அழைப்பை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தின் ஒரு தனி அறையில், சூடான், மற்றும் தென் சூடான் நாடுகளிலிருந்து உரோம் நகருக்கு வருகை தந்துள்ள ஆயர்களை, திருத்தந்தை சந்தித்து, ஒரு மணி நேரம் உரையாடினார்.

காலை பத்து மணிக்கு, திருத்தந்தையின் புதன் மறைகல்வி உரை திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.