2016-01-20 16:01:00

கொள்கைகள் ஏதுமற்ற வெற்றிடங்கள் வன்முறைக்கு வழிவகுக்கும்


சன.20,2016. "மதங்களை தவறான வழிகளில் பயன்படுத்தி, வன்முறைகளும், அடிப்படை வாதப் போக்குகளும் வளர்வதைப் போலவே, கொள்கைகள் ஏதுமற்ற வெற்றிடங்களும் வன்முறைக்கு வழிவகுக்கும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகளை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.

அரேபிய சிந்தனையாளர்கள் அமைப்பு என்ற குழுவினர், அபுதாபியில் அண்மையில் நடத்திய ஒரு கலந்துரையாடலில், திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவையின் செயலர், அருள்பணி Miguel Angel Ayuso Guixot அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

இஸ்லாமிய அறிஞர்கள் முதன் முதலாக மேற்கொண்ட இந்த முயற்சியில், கத்தோலிக்கத் திருஅவை சார்பில் அழைக்கப்பட்டிருந்தவர், அருள்பணி ஆயுசோ மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

மதங்களைத் தவறான முறையில் புரிந்துகொண்டு அவற்றை வன்முறைகளுக்குப் பயன்படுத்துவதையும், கொள்கைகள் ஏதுமற்ற வெற்றிடங்கள், சமுதாயத்தில், குறிப்பாக, ஐரோப்பிய சமுதாயத்தில் உருவாகியிருப்பதால், அது, வன்முறைகளுக்கு வழிவகுக்கின்றது என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பன்னாட்டு தூதர்களிடம் கூறியதை, அருள்பணி ஆயுசோ அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

"பல்சமய உரையாடலும், அடிப்படைவாதமும்: காரணங்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சந்திக்கும் கலாச்சாரம், மதத் தலைவர்களின் முக்கியப் பங்கு, உண்மையான உரையாடல் முயற்சிகள், செபத்தின் முக்கியத்துவம் என்ற கருத்துக்களில், அருள்பணி ஆயுசோ அவர்கள் தன் உரையை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.