2016-01-20 16:09:00

ஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கொடுமை


சன.20,2016. ஆயுதங்கள் கொண்டு நடத்தப்படும் சண்டைகளில், ஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவி மக்கள் மேலும், மேலும் கொல்லப்படுவது நாம் இன்று காணும் கொடுமை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

'ஆயுதம் ஏந்திய சண்டைகளில் குடிமக்களைக் காப்பது' என்ற தலைப்பில், ஐ.நா.பாதுகாப்பு அவை, நியூ யார்க் நகரில் இச்செவ்வாயன்று நடத்திய ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் ஐ.நா.அவை கூட்டங்களில் பங்கேற்கும் பேராயர் பெர்னதித்தோ அவுசா (Bernardito Auza) அவர்கள் இவ்வாறு கூறினார்.

1900மாம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆயுதத் தாக்குதல்களில், சாதாராணப் பொதுமக்களின் மரணங்கள் 5 விழுக்காடாக இருந்ததென்றும், 1990ம் ஆண்டுகளில் இறக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை 90 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும், பேராயர் அவுசா அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.

அப்பாவி பொதுமக்கள் பல தாக்குதல்களின் முதன்மையான இலக்குகளாக மாறியுள்ளனர் என்பதை, 2015ம் ஆண்டு வெளியான பல அறிக்கைகள் கூறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், இந்த உலகளாவியக் கொடுமைக்கு அனைத்து அரசுகளும், ஒட்டுமொத்த மனித சமுதாயமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

ஆயுதங்களை உருவாக்கும் தொழில் நிறுவனங்கள், இந்தக் கொடுமைகளைத் தூண்டிவிடும் முக்கியக் காரணம் என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இக்கொடுமைகளால் மிக அதிக அளவில் துன்புறுவது, குழந்தைகளும் பெண்களுமே என்று கூறினார்.

ஏரோது மன்னனால், மாசற்றக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதையும், இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுததையும் பன்னாட்டுத் தூதர்களிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 11ம் தேதி குறிப்பிட்டுப் பேசியதையும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

தாக்குதல்கள் நிகழும் பல நாடுகளில், அப்பாவி பொது மக்களை, கேடயங்களாகப் பயன்படுத்தும் வன்முறையே, மனித குலத்தின் மிகப்பெரும் பாவம் என்பதை வலியுறுத்திய பேராயர் அவுசா அவர்கள், உலக சமுதாயத்தில் நிலவும் அக்கறையின்மையைக் களைந்து அமைதியை வெல்வதற்கு அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.