2016-01-20 15:50:00

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் நிறைவு விழா நிகழ்வுகள்


சன.20,2016. 2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி துவங்கி, இவ்வாண்டு பிப்ரவரி 2ம் தேதி நிறைவடையும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் நிறைவு நிகழ்வுகள், சனவரி 28ம் தேதி முதல், பிப்ரவரி 2ம் தேதி முடிய, வத்திக்கானில் நடைபெறும் என்று, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு திருப்பேராயம், இப்புதனன்று அறிவித்துள்ளது.

சனவரி 28, அடுத்த வியாழனன்று மாலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் திருவிழிப்பு செப வழிபாட்டுடன் இந்த நிறைவு விழா நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.

சனவரி, 29, 30, 31 ஆகிய மூன்று நாட்களும் வத்திக்கானிலும், உரோம் நகரின் பல்வேறு இடங்களிலும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரி முதல் தேதி, திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறும் ஒரு கூட்டத்தில், இசை நிகழ்ச்சி, துறவியரின் சாட்சியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கு கூடியிருப்போரைச் சந்தித்துப் பேசுகிறார்.

பிப்ரவரி 2ம் தேதி கொண்டாடப்படும் 20வது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக நாளன்று, காலை, வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள அனைத்துத் துறவியரும் புனித பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவை நோக்கி  யூபிலி திருப்பயணம் மேற்கொள்வர் என்றும், அதன் இறுதியில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் நிறைவு விழாவில் கலந்துகொள்ள, உலகின் பல நாடுகளிலிருந்தும் வத்திக்கானுக்கு வருகை தரும் இருபால் துறவியரின் எண்ணிக்கை, 4000த்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.