2016-01-20 14:58:00

அமைதி ஆர்வலர்கள் : 2005ல் நொபெல் அமைதி விருது - பாகம்2


சன.20,2016. 2005ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை, IAEA என்ற அனைத்துலக அணுசக்தி நிறுவனமும், அச்சமயத்தில் அந்நிறுவனப் பொது இயக்குனராகப் பணியாற்றிய Mohamed Mustafa ElBaradei அவர்களும் பகிர்ந்து கொண்டனர். IAEA நிறுவனம், அமைதிக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளுக்கு அணு சக்தி பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கவும், அணு ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவுமென, 1957ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் உருவாக்கப்பட்டது. இது, ஜப்பானின் டோக்கியோ மற்றும் கனடாவின் டொராண்டோவில் இரண்டு பாதுகாப்பு அலுவலகங்களையும், நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் இரண்டு தகவல்தொடர்பு அலுவலகங்களையும் கொண்டுள்ளது. மேலும், IAEA நிறுவனத்துடன் 2005ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்துகொண்ட முகமது எல்பரதேய் அவர்கள், ஓர் எகிப்திய சட்ட வல்லுனர். இவரது தந்தை முஸ்தாஃபா எல்பரதேய் அவர்களும் ஒரு வழக்கறிஞர். இவர், எகிப்திய வழக்கறிஞர்கள் கழகத்திற்குத் தலைவராகவும் இருந்ததோடு, எகிப்தில் சனநாயக உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், நீதி அமைப்புக்குச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஆதரவாகச் செயலாற்றியவர். எனவே தந்தையின் பண்புகளை இயல்பாகக் கொண்டிருந்த முகமது எல்பரதேய் அவர்கள், தாய் மொழியான அரபு மொழியைத் தவிர, ஆங்கிலம், ப்ரெஞ்ச் மொழிகளைச் சரளமாகப் பேசுபவர். ஜெர்மன் மொழியும் அவருக்குத் தெரியும். இவர் 1942ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி கெய்ரோவில் பிறந்தவர்.

கெய்ரோ, ஜெனீவா, நியுயார்க் நகரங்களின் பல்கலைக்கழகங்களில் பன்னாட்டுச் சட்டத்தில் பட்டயங்களைப் பெற்றுள்ள முகமது எல்பரதேய் அவர்கள், 1964ம் ஆண்டில் எகிப்தில் வெளியுறவு அமைச்சகத்தில் தனது தூதரகப் பணியைத் தொடங்கினார். ஜெனீவா, நியுயார்க் நகரங்களிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில், அரசியல், சட்டம் மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு விவகாரங்களுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். 1981 முதல் 1987 வரை, நியுயார்க் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுச் சட்டயியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர், 1984ம் ஆண்டில், IAEA நிறுவனச் செயலகத்தில் மூத்த அலுவலகராகச் சேர்ந்து. 1993ம் ஆண்டு வரை, அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும், 1993 முதல் 1997 வரை அதன் வெளியுறவுத் துறையின் உதவிப் பொது இயக்குனராகவும் பணியாற்றினார். எல்பரதேய் அவர்கள், தற்போது பன்னாட்டு சட்டக் கழகம் மற்றும் அமெரிக்க பன்னாட்டு சட்டக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். இவர், 1997ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாந்தேதி முதல் 2009ம் ஆண்டு வரை, IAEA அனைத்துலக அணுசக்தி நிறுவனத்தின் பொது இயக்குனராகப் பணியாற்றினார். நான்கு ஆண்டுகள் கொண்ட இப்பதவிக் காலத்தில், 2001 மற்றும் 2005ம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் மூன்றாவது, நான்காண்டுகள் பதவிக்காலம் 2009ம் ஆண்டு நவம்பரோடு நிறைவடைந்தது. 2003ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈராக் ஆக்ரமிக்கப்பட்டபோது, அந்நாட்டை கண்காணித்தது உட்பட, ஆயுதப் பரவலைத் தடை செய்யும் விவகாரங்களையும், ஈரான் அணுத்திட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த பதட்டநிலைகளையும் இவர் திறமையுடன் கையாண்டார்.

பன்னாட்டு நிறுவனங்கள், தனது உறுப்பினர்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் அனுபவிக்க வேண்டுமெனில், அவை, தனது உறுப்பினர்களின் தேவைகளுக்குப் பதிலளிக்க வேண்டும், தனது சாதனைகளைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும், அவற்றின் நடவடிக்கைகள், நல்ல மதிப்பு கொண்டதாய், தனது நோக்கத்தை நிறைவேற்றுவதாய் இருக்க வேண்டும், சமத்துவநிலை காத்து, ஒளிவுமறைவின்றி     திறந்த உரையாடலுக்கு வழி அமைக்க வேண்டும். இவ்வாறு, முகமது எல்பரதேய் அவர்கள் தனது முதல் பதவியேற்பு உரையில் பேசினார். இவர், IAEA நிறுவனத்தின் பொது இயக்குனராகப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளேயே அந்நிறுவனத்திற்குப் புதியதொரு சூழலை உருவாக்கினார். அணு ஆயுதங்கள் அற்ற நாடுகள்(NNWSs), ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தின்படி, அந்த ஆயுதங்களை தயாரிக்கவோ அல்லது அவற்றை வாங்கவோ கூடாது, அணுப் பொருள்களையும், அது சார்ந்த நடவடிக்கைகளையும் IAEA நிறுவனத்தின் பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இதன்படி 2009ம் ஆண்டு நவம்பரில் 93 நாடுகள் இதற்கு இசைவு தெரிவித்தன. இவர், இரண்டாவது முறையாக, பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முக்கிய நிகழ்வு, ஈராக்கில் இந்நிறுவனம் அணு ஆயுதப் பரிசோதனையை நடத்தியதாகும். ஹான்ஸ் பிலிக்ஸ் அவர்களுடன் சேர்ந்து ஈராக்கில் இவர் நடத்திய சோதனைகளுக்குப் பின்னர், ஐ.நா. பாதுகாப்பு அவையிடம், நைஜர் நாட்டிலிருந்து ஈராக், உரேனியத்தை வாங்க முயற்சித்தது என்ற குற்றச் சாட்டு உண்மையல்ல என்று தெரிவித்தார். சதாம் ஹூசேன், தனது அணு ஆயுதத் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும் கூறினார். ஈராக் விடயத்தில் பொறுமை காக்க வேண்டுமென்றும், பின்னாளில் ஈராக் மீது போர் தொடுப்பதற்கு திட்டமிட்டதில் அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளின் பங்கேற்பு காரணமாக, அவர்கள் மீது அனைத்துலக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டுமென்றும் எல்பரதேய் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

எல்பரதேய் அவர்கள் IAEA நிறுவனத்தின் பொது இயக்குனராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து அதற்கான வேலைகளையும் செய்தது. ஆயினும், பிரான்ஸ், ஜெர்மனி, இரஷ்யா, சீனா, இன்னும் சில வளரும் நாடுகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தன. எனவே மூன்றாவது முறையாகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காண்டுகள் பணியில் இருந்தார். நான்காவது முறையாக இப்பணியை ஏற்க இவரே முன்வரவில்லை. எல்பரதேய் அவர்கள், பன்னாட்டு அளவில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்தார். அணு ஆயுதத் தடைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்தார். 2011ம் ஆண்டு சனவரி 27ம் தேதி எகிப்து திரும்பினார். அவ்வாண்டு சனவரி 25ம் தேதி, கடந்த முப்பது ஆண்டுகளாக இடம்பெறாத பெரிய போராட்டங்கள் எகிப்தில் தொடங்கின. எகிப்தில் இடைக்கால அரசை வழிநடத்த முன்வந்தார். அவரின் ஆதரவாளர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டனர். இவரும் எகிப்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பிரச்சனைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காணப்படுவதையே தான் எப்போதும் விரும்புவதாகத் தெரிவித்தார் எல்பரதேய்.

ல்பரதேய் அவர்கள் IAEA நிறுவனத்தின் பொது இயக்குனராகப் பணியாற்றிய காலமெல்லாம் உலகில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கங்களுக்காகவே செயல்பட்டுள்ளார். இவருக்கு, 2005ல் நொபெல் விருது தவிர பல பன்னாட்டு விருதுகளும் கிடைத்துள்ளன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.