2016-01-19 14:37:00

இது இரக்கத்தின் காலம் : திருத்தந்தைக்கும் இரக்கம் தேவை


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியக் கருத்துக்களைத் தொகுத்து, சனவரி 12, கடந்த செவ்வாயன்று, 'இறைவனின் பெயர் இரக்கம்' என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியானது. அப்பேட்டியில், தான் பொலிவியா நாட்டின் பால்மசோலா (Palmasola) எனுமிடத்தில் சிறைக்கைதிகளைச் சந்தித்த நிகழ்வை நினைவுகூர்ந்து, பேசினார் திருத்தந்தை:

"பால்மசோலா சிறைக்கைதிகள், என்னை அன்போடு வரவேற்றபோது, அவர்களிடம் நான் ஓர் உண்மையை, மனப்பூர்வமாகக் கூறினேன். திருத்தந்தைக்கும் இறைவனின் இரக்கம் தேவைப்படுகிறது என்பதே, நான் அவர்களிடம் கூறிய உண்மை. புனித பேதுருவும், பவுலும் சிறைக்கைதிகளாக இருந்தனர் என்பதை அக்கைதிகளுக்கு நினைவுறுத்தினேன். தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு, சிறையில் இருப்போருடன் எனக்கு, தனிப்பட்ட நெருக்கம் உள்ளது. நான் ஒரு பாவி என்ற உள்ளுணர்வே, இந்த நெருக்கத்தை உருவாக்குகிறது.

ஒவ்வொரு முறையும், நான், திருப்பலி ஆற்றவோ, அல்லது, கைதிகளைச் சந்திக்கவோ சிறைக்கூடத்திற்குள் நுழையும் வேளையில், 'ஏன் அவர்களுக்கு இந்நிலை? அது ஏன் நானாக இருந்திருக்கக் கூடாது?' என்ற ஓர் எண்ணம் எனக்குள் எழும். அவர்களுக்கு நிகழ்ந்த தவறு, எனக்கும் நிகழ்ந்திருக்கக்கூடும். நானும் அங்கிருக்கத் தகுதியுடையவன்தான். எனக்கு முன் நிற்கும் இவர்களைவிட, நான் எவ்வகையிலும் உயர்ந்தவன் அல்ல. அவ்வாறு நான் உணர்வதால், எனக்குள் நானே கேள்வி எழுப்பி, செபிப்பது இவ்வாறுதான்: 'ஏன் அவர்களுக்கு இந்நிலை? அது ஏன் நானாக இருந்திருக்கக் கூடாது?'

நான் சொல்வது அதிர்ச்சியைத் தரலாம்; ஆனால், பேதுருவை எண்ணி, நான் ஆறுதல் அடைகிறேன். அவர் இயேசுவை மறுதலித்தார், இருப்பினும் அவர் தேர்ந்துகொள்ளப் பட்டார்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.