2016-01-18 16:13:00

குடிபெயர்ந்தவர்கள், நம்பிக்கை மற்றும் மகிழ்வை இழக்க வேண்டாம்


சன.18,2016. வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்கள், வாழ்வு மீது நம்பிக்கை மற்றும் மகிழ்வைப் பறித்துவிடாதபடிக்குப் பார்த்துக் கொள்ளுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குடிபெயர்ந்தவர்களிடம் கூறினார்.

இஞ்ஞாயிறன்று, 102வது உலக குடிபெயர்ந்தவர்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தையின் மூவேளை செப உரையைக் கேட்பதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல நாடுகளின், ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்தவர்களிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

பல நாடுகளைச் சார்ந்த குடிபெயர்ந்தவர்கள் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயப் புனிதக் கதவைக் கடந்து சென்று, அங்கு நடந்த யூபிலி திருப்பலியிலும் கலந்துகொண்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை, ஒரு கலாச்சாரம், விலைமதிப்பற்ற விழுமியங்களைக் கொண்டிருக்கின்றனர், ஆனால், இவர்கள் வறுமை, அடக்குமுறை மற்றும் அச்சத்தால் அடிக்கடி ஆட்கொள்ளப்படுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

இவர்கள் இவ்வளாகத்தில் கூடியிருப்பது, கடவுளில் நம்பிக்கை வைத்திருப்பதன் அடையாளமாக உள்ளது என்றும், இவர்களை ஏற்று, உதவிபுரியும் நாடுகளுக்கு நன்றியுள்ளவர்களாக வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திருப்பலியில் பயன்படுத்துவதற்கு ஓஸ்திகளைத் தயாரித்த மிலான் சிறைக் கைதிகளுக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை.

இன்னும், இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலும்,  புர்க்கினோ ஃபாசோ தலைநகர் Ouagadougouவிலும் இடம்பெற்ற கடும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர்க்குத் தனது செபங்களைத் தெரிவித்த திருத்தந்தை, உலகில் அமைதியைக் கட்டியெழுப்புமாறு உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.