2016-01-18 15:46:00

கிறிஸ்தவ சபைகள், ஒன்றுசேர்ந்து அமைதியை ஊக்குவிக்க அழைப்பு


சன.18,2016. சண்டை, புறக்கணிப்பு மற்றும் உலகப் போக்கால் அடிக்கடி பிளவுண்டிருக்கும் இவ்வுலகில், இயேசு கிறிஸ்துவில் நம் விசுவாசத்தை ஒன்றுசேர்ந்து அறிவிப்பதன் வழியாக, நாம் இன்னும் அதிகமாக, ஒன்றிப்பின் சாட்சிகளாகவும், அமைதியையும், ஒப்புரவையும் ஊக்குவிப்பவர்களாகவும் மாற இயலும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவிடம் கூறினார்.

கிறிஸ்தவ சபைகள், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை, இத்திங்களன்று தொடங்கியுள்ளவேளை, இதே நாளில், ஃபின்லாந்திலிருந்து உரோம் வந்திருந்த லூத்தரன் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் குழுவை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயற்கையைப் பாதுகாப்பதில், கத்தோலிக்கத் திருஅவையுடன் இணைந்து இச்சபை ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

திருஅவையின் வாழ்வில் ஏற்புடமை பற்றிய பொதுவான ஏடு குறித்து, லூத்தரன் கிறிஸ்தவ சபைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே இடம்பெற்றுவரும் உரையாடலில், திருஅவை, திருநற்கருணை, திருப்பணி ஆகியவற்றின் அருளடையாள நிலையில் நம்பிக்கைதரும் முன்னேற்றம் காணப்படுவதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

“உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிக்கும் பொருட்டு, நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரசக் குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தவர், கடவுளின் உரிமைச் சொத்தான மக்கள்” (1 பேது.2:9) என்ற, இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தின் கருப்பொருள், அனைத்துக் கிறிஸ்தவர்களின் பொதுவான அழைப்பை நன்றாக வெளிக்கொணர்ந்துள்ளது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.