2016-01-18 15:12:00

இது இரக்கத்தின் காலம் – எதையும் எதிர்பார்க்காதே


ஒரு வியாபாரி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வியாபாரிக்கு எதிரே வந்தவர், அவரை நிறுத்தி, "என்னை உங்களுக்கு நினைவு இருக்கிறதா?" என்று கேட்டார். பின்னர் அந்த வியாபாரியிடம், "உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நகரத்திற்கு வந்தபோது, என்னிடம் பணம் இல்லை என்று உங்களிடம் கேட்டேன். அதற்கு நீங்களும் என்னிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, ஒருவரின் வெற்றிப் பாதையில் செல்ல இது உதவட்டும் என்று வாழ்த்திக் கொடுத்து உதவி செய்தீர்கள் என்றார் எதிரே வந்தவர். அதைக் கேட்ட வியாபாரியும், சிறிது நேரச் சிந்தனைக்குப்பின், அவரிடம் ஆமாம், அதற்கு இப்போது என்ன என்று ஆவலுடன் கேட்டார். அதற்கு எதிரே வந்தவர், இல்லை எப்படி அப்போது எனக்குப் பணம் கொடுத்து உதவி புரிந்தீர்களோ, அதேபோல் இப்போதும் ஒரு வாய்ப்புக் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். அதைக் கேட்ட வியாபாரி அதிர்ச்சியடைந்தார். இந்தக் கதையை தன் சீடர்களிடம் சொல்லி முடித்த ஜென் துறவி ஒருவர், பின்னர் சீடர்களிடம், ஒருவர் தனக்கு ஒருமுறை எதிர்பாராமல் உதவி செய்தால், மீண்டும் மீண்டும் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நமக்கு எந்த நேரத்தில் எது கிடைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் அது நமக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால், நிச்சயம் அது நமக்கு கிடைக்கும் என்று சொன்னார். அன்பர்களே, ஒருமுறை கிடைத்த உதவிக்கு நன்றியுடன் வாழ்வதே சிறந்தது. தொடர்ந்து எதையும் எதிர்பார்ப்பது கொடுப்பவரை சங்கடத்தில் ஆழ்த்தும். இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.