2016-01-18 15:50:00

1% செல்வந்தர்களின் சொத்து, 99% மக்களின் செல்வத்துக்குச் சமம்


சன.18,2016. உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுச் செல்வந்தர்கள், அதாவது ஏறக்குறைய 7 கோடியே 30 இலட்சம் பேர், உலகின் 99 விழுக்காட்டு மக்களின் மொத்த செல்வத்தையும்விட அதிக செல்வத்துக்கு உரிமையாளர்கள் என்று ஆக்ஸ்ஃபாம் என்ற உதவி மற்றும் வளர்ச்சிக்கான தொண்டு நிறுவனம் கூறுகின்றது.

உலகில், 3.6 பில்லியன் ஏழைகளிடம் இருக்கும் மொத்த செல்வத்தைவிட அதிக செல்வம் உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ள 62 பேரிடம் உள்ளதாகவும் உலக ஏற்றத்தாழ்வு பற்றிய ஆக்ஸ்ஃபாமின் புதிய அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

ஏறக்குறைய ஏழரை ட்ரில்லியன் டாலர் (ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி டாலர்) மதிப்பிலான செல்வத்தை உலகச் செல்வந்தர்கள் தங்களின் தாயகத்துக்கு வெளியே உள்ள, வரிசெலுத்துவதிலிருந்து தப்பிக்கக்கூடிய இடங்களில் வைத்துள்ளதாக அந்தத் தொண்டு நிறுவனம் கூறுகின்றது.

இந்த வரி ஏய்ப்பை முறியடிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆக்ஸ்ஃபாம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ள செல்வத்தில் ஏறக்குறைய 50 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு செல்வந்த ஆப்ரிக்கர்களே சொந்தக்காரர்கள் என்றும் கூறும் ஆக்ஸ்ஃபாம், அதனால் ஆப்ரிக்கக் கண்டம் முழுமைக்கும் ஆண்டுக்கு 1,400 கோடி டாலர் வரி இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.