2016-01-16 14:49:00

திருத்தந்தை: மனித உழைப்பு, இறைவனிடமிருந்து வரும் அழைப்பு


சன.16,2016. மனித உழைப்பு, இறைவனிடமிருந்து வரும் ஓர் அழைப்பு; ஏனெனில், துவக்கத்திலிருந்தே இறைவன் இவ்வுலகைப் பண்படுத்தவும், பாதுக்காக்கவும் மனிதரை அழைத்தார் (தொடக்க நூல் 2:15) என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலியில் இயங்கிவரும் கிறிஸ்தவத் தொழிலாளர் அமைப்பின் 7000க்கும் அதிகமான உறுப்பினர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சனவரி 16, இச்சனிக்கிழமை மதியம், திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இவ்வமைப்பைச் சார்ந்த இரு உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்ட சாட்சியங்களுக்குச் செவிமடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பகிர்வுகளுக்குப் பதில் தரும் வகையில் தன் உரையை வழங்கினார்.

கல்வி புகட்டுதல், பகிர்தல், சாட்சிய வாழ்வு ஆகிய மூன்று எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை அவர்கள் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கல்வி புகட்டுதல் என்பது, ஒருவரிடமுள்ள மிகச் சிறந்தவற்றை வெளிக்கொணர்தல் என்று வலியுறுத்தியத் திருத்தந்தை, பல்வேறு நுட்பங்களைப் பயில்வது மட்டும் கல்வியாகாது என்றும், முழு மனிதருக்கு உள்ளிருக்கும் அனைத்தையும் உன்னதமாக்குவதே உண்மைக் கல்வியென்றும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவரும் செய்கின்ற தொழில், தனிப்பட்டவர்களை வளர்த்துக்கொள்ள மட்டும் பயன்படாமல், பிறரோடு நன்மைகளைப் பகிர்ந்துகொள்வதிலும் நம் உழைப்பு பலன்தர வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

மூன்றாவதாக, இவ்வமைப்பினர், தங்கள் சாட்சிய வாழ்வால், தொழில் உலகை உயர்த்த வேண்டும், குறிப்பாக, வேலைவாய்ப்பும், மனித மாண்பும் இழந்து தவிக்கும் மக்களை உயர்த்தும் வகையில் இத்தாலியக் கிறிஸ்தவத் தொழிலாளர் அமைப்பு செயலாற்றவேண்டும் என்று, திருத்தந்தை விண்ணப்பித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.