2016-01-16 15:08:00

கிறிஸ்தவ சபைகள் இணைந்து உயிர்ப்பு நாளைக் கொண்டாட ஆதரவு


சன.16,2016. அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் 'கிறிஸ்து உயிர்ப்பு விழா'வைச் சிறப்பிக்கும் விதமாக  ஒரு பொது நாளை உருவாக்க, திருத்தந்தையுடன் இணைந்து முயற்சித்து வருவதாக அறிவித்துள்ளார், கான்டர்பரியின் ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby.

அனைவருக்கும் ஏற்புடைய பொது நாள் ஒன்றை அறிவிப்பதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வியுற்றுள்ள போதிலும், தற்போதைய முயற்சி, அடுத்த ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் நிச்சயம் வெற்றிபெறும் என தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார், ஆங்கிலிக்கன் பேராயர்.

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை தலவராகிய தனக்கும், திருத்தந்தைக்கு பிரான்சிஸ் அவர்களுக்கும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருத்தந்தை Tawadros  மற்றும் கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைத்தலைவர் முதலாம் பர்த்தலோமேயு ஆகியோருக்கும் இடையே, கிறிஸ்து உயிர்ப்பு நாளை ஒரே நாளில் கொண்டாடுவது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அறிவித்தார் ஆங்கிலிக்கன் பேராயர் வெல்பி.

அனைவரும் ஒரே நாளில் கிறிஸ்து உயிர்ப்பு நாளைக் கொண்டாட வேண்டும் என்ற தன் விருப்பத்தை, கடந்த ஜூன் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.