2016-01-16 15:13:00

10 ஆண்டுகளுக்குப் பின், சொந்த மண்ணில் மக்களின் தைப்பொங்கல்


சன.16,2015. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் மீளக்குடியேறியுள்ள மக்கள் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களின் சொந்த மண்ணில் தைப் பொங்கல் நாளைக் கொண்டாடினர் என்று பிபிசி செய்தியொன்று கூறியுள்ளது.

நெல் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் தமது முக்கிய வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வந்த இக்குடும்பங்கள், போர்ச் சூழ்நிலை காரணமாக, தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.

முன்னாள் அரசுத்தலைவர், மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசால் சம்பூர் பகுதியிலுள்ள நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவும் பொருளாதார வலயமாகவும் அடையாளம் காணப்பட்டு கையகப்படுத்தப்பட்டதன் காரணமாக, இக்குடும்பங்களின் மீள் குடியேற்றம் தடைப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றத்தை அடுத்து, கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் அவர்களின் நிலங்கள் விடுவிக்கப்பட்டு முதற்கட்டமாக ஒரு தொகுதியினருக்குரிய நிலங்கள் மீண்டும் அக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

10 ஆண்டுகளுக்குப் பின்னர், இவ்வெள்ளியன்று, தங்களின் சொந்த மண்ணில் பொங்கல் நாளைக் கொண்டாடிய சம்பூர் மக்கள், பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மீளக்குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினாலும், தொடர்ந்து முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களிடம் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை என்று, அப்பகுதியைச் சேர்ந்த கிழக்கு மாநில அவை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் அவர்கள் கூறினார்.

இருந்த போதிலும் அடுத்த இரண்டு மாதங்களில் கடற்படை முகாம், அடையாளம் காணப்பட்டுள்ள வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு அந்த மக்களிடம் இருப்பதாகவும் நாகேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார். 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.