2016-01-15 15:42:00

கந்தமாலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்த விவரங்கள்


சன.15,2016. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், 2008ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது, இந்தியத் திருஅவை.

கந்தமால் மாவட்டத்தில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களை, மறைசாட்சிகளாக அறிவிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, அக்கிறிஸ்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக, ஒடிசா ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி பணிக்குழுச் செயலர் அருள்பணி அஜய் சிங் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், இது குறித்துப் பேசிய, கட்டக்-புவனேஷ்வர் பேராயர், ஜான் பார்வா அவர்கள்,  வருகிற மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள இந்திய ஆயர் பேரவைக் கூட்டத்தில் கலந்தாலோசித்த பின்னர், இதன் அதிகாரப்பூர்வ நடவடிக்கை தொடங்கப்படும் என்று கூறினார்.

இக்கிறிஸ்தவர்களின் நினைவாக, இவ்வாண்டில், ஒரு நினைவுச்சின்னம் எழுப்புவதற்கும் ஒடிசா தலத்திருஅவை திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார் பேராயர் ஜான் பார்வா.

பூர்வீக இனமக்கள் பெரும்பான்மையாக வாழும் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில், இந்து தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத்  தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு, 350 ஆலயங்களும், 6,500 வீடுகளும் சூறையாடப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 56 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். ஒரு கத்தோலிக்க அருள்சகோதரி உட்பட, பலர் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.