2016-01-15 15:35:00

இலங்கையர் மத்தியில் ஒற்றுமைக்கு கர்தினால் இரஞ்சித் அழைப்பு


சன.15,2016. இலங்கை மக்கள், தங்களின் பழைய காழ்ப்புணர்வுகளை ஒதுக்கி, இன, மத, மொழி வேறுபாடின்றி ஒற்றுமைக்காக உழைக்குமாறு கேட்டுக்கொண்டார், கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித்.

இலங்கையின் தொன்மைமிக்க Gnanartha Pradeepaya கத்தோலிக்க நாளிதழின் 150ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இனம் அல்லது  மதத்தின் அடிப்படையில் தங்களை அடையாளம் காட்டுவதை, இலங்கை மக்கள் தவிர்த்து, ஒற்றுமையாக வாழுமாறு வலியுறுத்தினார்.

நான், சிங்களம், தமிழ், முஸ்லிம் அல்லது எனது மதம் புத்தம், இந்து, இஸ்லாம் அல்லது கத்தோலிக்கர் என்று ஒவ்வொருவரும் அடையாளம் காட்டிய சகாப்தத்திலிருந்து நாம் வெளியேற வேண்டுமென்றும் கூறினார், கர்தினால் இரஞ்சித்.

இனம் மற்றும் மத கோட்பாடுகளின்படி தங்களை வெளிப்படுத்தும் அரசியல் கட்சிகளையும், தீவிரவாத அமைப்புகளையும் துணிச்சலுடன் தடை செய்வதற்கு காலம் கனிந்துள்ளது என்றும், இத்தகையக் கட்சிகள் பிரிவினையை ஏற்படுத்தி, தேசிய நல்லிணக்கத்திற்கு எதிராக வேலை செய்கின்றன என்றும் பேசினார் கர்தினால் இரஞ்சித்.

இலங்கையின் 2 கோடியே 10 இலட்சம் மக்களில் 70 விழுக்காட்டினர் புத்த மதத்தினர், 10 விழுக்காட்டினர் முஸ்லிம்கள், 12 விழுக்காட்டினர் இந்துக்கள் மற்றும் 7  விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இலங்கையில், 2014ம் ஆண்டில், முஸ்லிம்களுக்கு எதிராக 88 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 55 தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன என்று ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.