2016-01-15 14:33:00

இது இரக்கத்தின் காலம்: நம்மிடையே ஏழையாகவே வாழ்கிறார் இறைவன்


ஒவ்வோர் ஆண்டும், கோவிலில் மாடு வெட்டி இறைவனுக்குப் படைப்பதும், விளைச்சலின் முதல் கனிகளை ஆண்டவன் முன் படைத்து, அதனை எரித்து சாம்பலாக்குவதும் தனக்கேயுள்ள உரிமை என்று நடத்தி வந்தார், அந்த ஊர் பண்ணையார் ஜம்புலிங்கம். அவ்வாறே அந்த ஆண்டும் திருவிழாவிற்கென மாட்டு வண்டியில் தானியங்களையும் பழங்களையும் ஏற்றிக்கொண்டு, கொழுத்த மாடு ஒன்றையும் வண்டியின் பின்னால் கட்டிக்கொண்டு,  ஊருக்கு வெளியே உள்ள கோவிலை நோக்கி காட்டு வழியேச் சென்று கொண்டிருந்தார். அவர் எதிரே வந்த  முனிவர் ஒருவர், பண்ணையாரைப் பார்த்து, 'ஐயா எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். 'பார்த்தால் தெரியவில்லையா? இன்றைய விழாவில் இறைவனுக்கு நான் இவற்றைப் பலியிடப் போகிறேன்' என்றார் ஜம்புலிங்கம். 'இது என்ன விநோதம்? அனைத்தையும் எரித்து வீணாக்குகின்றீர்களே, இதை ஏழைகளுக்குக் கொடுத்தால், வயிறார உண்டுவிட்டு, உங்களையும் இறைவனையும் வாழ்த்திச் செல்வார்களே' என கூறினார் முனிவர். ‘அது எனக்குத்  தெரியும். நீர் வேலையைப் பார்த்துக் கொண்டுப் போகலாம்' என்றார் பண்ணையார். காட்டு வழியேச் சென்ற பண்ணையாரை, சிறிது நேரத்தில் கொள்ளையர்கள் தாக்கினர்.  குற்றுயிரும் குலையுயிருமாக நின்ற பண்ணையாரின் அலறல் கேட்டு பக்கத்துக் கிராம மக்கள் ஓடி வந்து, கொள்ளையர்களை விரட்டி, அவரைக் காப்பாற்றினர். இவ்வளவு காயங்களோடு தன்னால் பிராயாணம் செய்ய முடியாது, குணம் பெற்றுக் கோவிலுக்கு செல்வதற்குள், பொருட்களெல்லாம் கெட்டுவிடும் என்பதை உணர்ந்த பண்ணையார், தான் கொண்டு வந்த பொருட்களையெல்லாம் அந்த ஊர் ஏழைகளுக்குத் தானமாக அளித்தார்.  மாட்டுக்கு தீனி போட முடியாது என்பதால், அந்த ஊருக்கே மாட்டையும் பரிசாக அளித்தார்.  அந்த ஊரிலேயே தங்கி சிகிச்சைப் பெற்ற பண்ணையாரின் கனவில் தோன்றிய கடவுள், 'இந்த ஊர் மக்கள் மீது இரக்கப்பட்டு இந்த பொருட்களை நீ கொடுக்கவில்லை என்றாலும், முதன் முறையாக உன் காணிக்கைகள் என் திருவடி வந்தடைந்துள்ளன. ஏழைகளுக்கு நீ செய்யும் நன்மையும் தீமையும் எனக்கேச் செய்ததாகும் என்பதைப் புரிந்துகொள்' என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.