2016-01-14 15:53:00

இரக்கம் நிறைந்த ஒரு நாடாக பிலிப்பைன்ஸ் - கர்தினால் தாக்லே


சன.14,2016. பிலிப்பைன்ஸ் நாடு, 2016ம் ஆண்டு, இரக்கத்திலும் பரிவிலும் நிறைந்த ஒரு நாடாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக, மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

2015ம் ஆண்டு சனவரி மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் தாக்கம் மக்களிடம் இன்னும் பரவலாக உள்ளது என்று, கர்தினால் தாக்லே அவர்கள், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

இரக்கம் குறித்து திருத்தந்தை கூறிவரும் கருத்துக்கள், பிலிப்பைன்ஸ் நாட்டு குடும்பங்களை சக்தி மிகுந்த இரக்கத்தின் கருவிகளாக மாற்றும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில், வேறுபல எதிர்மறையான உலகப் போக்குகளால் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடையே ஊழல், ஏமாற்றுதல் ஆகிய தவறான எண்ணங்கள் ஊடுருவி இருப்பதையும் கர்தினால் தாக்லே அவர்கள் தன் பேட்டியில் வருத்தத்துடன் குறிப்பிட்டார் என UCAN செய்தி கூறியது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.