2016-01-13 16:17:00

லாம்பதூசா தீவில், புனிதக் கதவு திறக்கும் நிகழ்வு


சன.13,2015. நடைபெற்றுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, சனவரி, 16 வருகிற சனிக்கிழமை, இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள லாம்பதூசா தீவில், இத்தாலியக் கர்தினால் பிரான்செஸ்கோ மோந்தெநேக்ரோ (Francesco Montenegro) அவர்கள், புனிதக் கதவைத் திறக்கிறார்.

லாம்பதூசா தீவில் அமைந்துள்ள, மீட்பின் வாயிலான அன்னை மரியா திருத்தலத்தில் அமைந்துள்ள கதவை, சனவரி 16 மாலைத் திருவழிபாட்டு நேரத்தில் ஆக்ரிஜெந்தோ (Agrigento) உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் மோந்தெநீக்ரோ அவர்கள் திறந்து வைக்கிறார்.

சனவரி 17, ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் நாளை மையப்படுத்தி, 'ஐரோப்பாவின் வாயில்' என்று கருதப்படும் லாம்பதூசா தீவில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆபத்தான படகுகளில் பயணங்கள் மேற்கொண்டு, லாம்பதூசா தீவை அடைவதற்கு முன் இறந்த பலரின் நினைவாக இங்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படுகிறது என்று கர்தினால் மோந்தெநீக்ரோ அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கியூபா நாட்டில் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூது பயணத்தின்போது கியூபா அரசுத் தலைவர் இரவுல் காஸ்த்ரோ அவர்கள் திருத்தந்தைக்கு வழங்கிய ஒரு சிலுவை, சனவரி 17ம் தேதி நடைபெறும் திருப்பலியின் போது, லாம்பதூசா கோவிலுக்கு காணிக்கையாக அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.