2016-01-13 16:03:00

யூதத் தொழுகைக் கூடம் செல்லும் திருத்தந்தை


சன.13,2015. யூத எதிர்ப்பு எண்ணங்களுடன் வாழ்வது, உண்மையான கிறிஸ்தவர்களுக்கு முற்றிலும் முடியாத ஒரு விடயம் என்று திருத்தந்தை அடிக்கடி கூறும் கருத்து, சனவரி 17, வருகிற ஞாயிறன்று மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுபடுத்தப்படும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சனவரி 17, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் உள்ள யூதத் தொழுகைக் கூடத்திற்குச் செல்லும் நிகழ்வு குறித்துப் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோச் (Kurt Koch) அவர்கள் இவ்வாறு கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் துவக்கத்தில் நிகழும் இந்த சந்திப்பு குறித்து கேள்வி எழுந்தபோது, திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இந்த நல்லுறவை வளர்க்கும் பாரம்பரியத்தைத் தொடர்வது மகிழ்வான ஒரு விடயம் என்று கூறினார்.

மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் என்று திருஅவை அறிவித்துள்ள இந்த சிறப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, யூத தினம் (Day of Judaism) என்ற ஒரு நாளை, இத்தாலிய ஆயர் பேரவை கொண்டாடவிருப்பதையும், வேறு பல ஆயர் பேரவைகள் இந்த நாளைக் கொண்டாட விருப்பம் தெரிவித்திருப்பதையும் கர்தினால் கோச் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவம் அல்லாத மதங்களுடன் கத்தோலிக்கத் திருஅவைக்கு உள்ள தொடர்பை விளக்கும் Nostra Aetate என்ற அறிக்கையை திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அவர்கள் வெளியிட்டதன் பொன்விழா அண்மையில் கொண்டாடப்பட்டதையும் கர்தினால் கோச் அவர்கள் தன் பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.