2016-01-13 15:29:00

பாவிகளின் வரவேற்பு பெரும் விருந்தாக அமைகிறது


சன.13,2015. இறைவனின் இரக்கம் என்ற ஆறுதல்தரும் பேருண்மைக்குள் நம்மைக் கரம்பிடித்து அழைத்துச் செல்வதுபோல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "இறைவனின் பெயர் இரக்கம்' என்ற நூல் அமைந்துள்ளது என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

சனவரி 12ம் தேதி வெளியிடப்பட்ட இந்நூலைக் குறித்து L'Osservatore Romano என்ற வத்திக்கான் நாளிதழில் கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கியுள்ள ஒரு பேட்டியில், திருத்தந்தையின் இந்நூலில், அறிவுக்கு எட்டாத உண்மைகளைத் தேடிச் சென்றால், அங்கு நாம் காண்பது மிக எளிய வாழ்க்கை அனுபவங்களே என்று கூறியுள்ளார்.

இறைவனின் இரக்கத்திற்கு இலக்கணம் எழுதி, அந்த இரக்கத்தை கட்டுப்படுத்துவதற்குப் பதில், அந்த இரக்கத்திற்குள் நுழைவதற்கு, திருத்தந்தையின் பேட்டி, போதுமான கதவுகளைத் திறந்து வைத்துள்ளது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பாவத்தைக் கண்டிக்கும் திருஅவை, பாவிகளை வரவேற்கிறது என்றும், அந்த வரவேற்பு ஒரு பெரும் விருந்தாக அமைகிறது என்றும் திருத்தந்தை தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் கர்தினால் பரோலின் அவர்கள், இரக்கத்தின் முக்கிய வெளிப்பாடாக விளங்கவேண்டியது மகிழ்வான ஒரு விருந்து என்பதை லூக்கா நற்செய்தி வலியுறுத்துகிறது என்பதையும் தன் பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.