2016-01-13 15:54:00

பாகிஸ்தான் போலியோ மருத்துவ முகாமில் குண்டு வெடிப்பு


சன.13,2015. பாகிஸ்தானின் தென் மேற்குப் பகுதி நகரான குவெட்டாவில் (Quetta) போலியோ மருத்துவ முகாம் ஒன்றின் அருகே இப்புதனன்று நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர், தடுப்பூசி போட வந்த ஊழியர்களுக்குப் பாதுகாப்பு தந்து கொண்டிருந்த காவல்துறையினர் என்று, நகரின் காவல்துறைத் துணை ஆணையர் கூறினார். அதிகாலையில் மருத்துவக் குழுக்கள் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது.

அண்மைய ஆண்டுகளில் பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து தரும் ஊழியர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தொடர்ச்சியாகக் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வந்துள்ளனர்.

போலியோ தடுப்பு மருந்து தருவது என்பது, பாகிஸ்தான் குழந்தைகளை மலடாக்க, மேலை நாடுகள் செய்யும் சதியே என்று தீவிரவாதிகள் கூறி வருகின்றனர்.

பாகிஸ்தானும், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானும்தான், உலகில் போலியோ பரவலைத் தடுக்காத இரண்டு நாடுகள் ஆகும்.

ஆதாரம் : AsiaNews/BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.