2016-01-13 15:43:00

'இறைவனின் பெயர் இரக்கம்' – சிறைக்கைதியின் பார்வையில்


சன.13,2015. 'இறைவனின் பெயர் இரக்கம்' என்ற தலைப்பில், திருத்தந்தை வழங்கியுள்ள ஒரு நேர்காணலின் தொகுப்பு, இச்செவ்வாயன்று உரோம் நகரின் புனித அகஸ்டின் பல்கலைக் கழகத்தில் வெளியான நிகழ்வில், சிறைக் கைதியாக உள்ள Zhang Jianqing Augustine என்ற ஒரு சீன இளையவர் பேசியது, கூடியிருந்தோரின் உள்ளத்தைத் தொட்டது என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

இத்தாலியின் பதுவை நகரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள Zhang Augustine என்ற இளையவர், 'இறைவனின் பெயர் இரக்கம்' என்ற நூலைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட வேளையில், பரிவு கொண்ட ஒரு மேய்ப்பரின் உணர்வுகளை இந்த நூலில் காண முடிகிறது என்று கூறினார்.

புத்த மதத்தில் பிறந்தவராயினும், தான் சிறையில் அடைபட்ட வேளையில், தன்னை சந்திக்க வந்திருந்த கிறிஸ்தவர்களின் உதவியுடன், தான் இயேசுவுக்கு அறிமுகமானதையும், அவர்கள் வழியாக தான் உணர்ந்த கிறிஸ்தவ இரக்கத்தினால் தான் திருமுழுக்கு பெற்றதையும் Zhang Augustine அவர்கள் எடுத்துரைத்தார்.

புனித அகஸ்டின் அவர்களின் தாய் மோனிகா, தன் மகனுக்காகக் கண்ணீர் சிந்தியதைப் போல, தன் தாயும் தனக்காக கண்ணீர் சிந்தியுள்ளார் என்று கூறிய சிறைக் கைதி Zhang Augustine அவர்கள், தான் புனித அகஸ்டின் அவர்களின் பெயரைத் தெரிவு செய்ததற்கு, இதுவே காரணம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இவரைத் தொடர்ந்து இந்த வெளியீட்டு விழாவில் பேசிய இத்தாலிய திரை உலகக் கலைஞர், ரொபெர்த்தோ பெனினி (Roberto Benigni) அவர்கள், திருத்தந்தை விளக்கியுள்ள இரக்கம், வெறும் மென்மையான உணர்வு மட்டுமல்ல, மாறாக, அது வாழ்க்கையை மாற்றும் சவால்களையும் உள்ளடக்கியது என்பதை, திருத்தந்தையின் பேட்டி சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.