2016-01-13 15:28:00

இது இரக்கத்தின் காலம்... – நமக்கு நாமே எழுதும் தீர்ப்பு


உலகின் ஒரு பகுதி இயற்கைச் சீற்றத்தால் அழிந்தது. அன்று உயிரிழந்த அனைவருக்கும், தானே தீர்ப்பெழுதாமல், ஒரு வித்தியாசமான முறையைக் கையாண்டார் கடவுள். தான் படைத்த இயற்கையிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். மரத்தை நோக்கி மனிதர்களுக்கு தீர்ப்பெழுதச் சொன்னார். மரமோ, "நான் சிறு வயதாக இருக்கும்போது இந்த மனிதர்கள் எனக்குத் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார்கள். ஆனால், நான் பெரியவனாகிவிட்டவுடன் என்னை ஈவிரக்கமின்றி வெட்டுகிறார்கள். அதனால், என் கிளைகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த பறவையினங்களும், மற்ற உயிரினங்களும் அழிந்து விடுகின்றன. என் அழகைக் காண வரும் மேகக் கூட்டங்கள், நான் இங்கே மொட்டையாக இருப்பதைக் காண சகிக்காமல், என் மீது அன்பு மழையைப் பொழியாமல் சென்று விடுகின்றன. ஆகவே, இறைவா, இந்த மனிதர் மீது இரக்கம் காட்ட வேண்டாம்'' என்று கூறியது. அதைக் கேட்ட மனித குலம் திடுக்கிட்டது. பின்னர், ஓடும் ஆற்றை நோக்கிக் கேட்டார் கடவுள். "இந்த மனிதர்கள், புனிதமானவள் என்று சொல்லி என்னை வணங்குகிறார்கள், போற்றுகிறார்கள். எனினும் என் மீதே குப்பைக் கூளங்களைக் கொட்டுகின்றனர். தொழிற்சாலைகளின் கழிவு நீரையும், சாக்கடை நீரையும் என் மீது பாய விடுகின்றனர். என்னைக் கண்ணெனக் காக்கும் மணல் தாயை கதறக் கதற எடுத்துச் செல்கின்றனர். எனவே ஆண்டவா, இந்த மனிதர் மீது தயை காட்ட வேண்டாம்'' என்றது ஆறு. இதைக் கேட்ட இறைவன் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் ஓர் எருதிடம் கருத்துக் கேட்டார் கடவுள். அந்த எருது அழுது கொண்டே, "நான் இந்த மனிதர்களுக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கிறேன். மேடு பள்ளமான நிலங்களை உழுது, விளைச்சலைப் பெருக்க உழைத்திருக்கிறேன். ஆனால், இப்போது எனக்கு வயதாகி விட்டது என, என்னை கறிக்கடைக்கு விற்று விட்டார்கள். மாடாய் உழைக்கும் என்னையே, நன்றியில்லாமல் வெட்டிச் சாப்பிடுகின்றனர். ஆகவே இவர்கள் இரக்கத்திற்கு தகுதியற்றவர்கள்” என்று கூறியது.

இறைவன் குழம்பினார். தான், மணிமகுடமாய் படைத்த மனிதருக்காகப் பரிந்துரைக்க யாருமே இல்லையே என்று வருந்தினார். 'பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேட்டும், இரக்கமின்றி வாழ்ந்த நீங்கள், இப்போது மறுபக்கத்தில் நின்றுகொண்டு உங்களுக்கு நீங்களே மனசாட்சியோடு தீர்ப்பெழுதுங்கள்” என்று, மனிதர்கள் வசமே தீர்ப்பை விட்டுவிட்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.