2016-01-12 16:30:00

திருத்தந்தை : “இரக்கம், கடவுளின் அடையாள அட்டை"


சன.12,2016. “இரக்கம், கடவுளின் அடையாள அட்டை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “கடவுளின் பெயர் இரக்கம் (The Name of God is Mercy)” என்ற தனது நேர்காணல் புத்தகத்தில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய புத்தகத்தை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், இத்தாலிய நடிகரும் இயக்குனருமான ரொபெர்த்தோ பெனினி ஆகிய இருவரும் உரோம் நகரில் பத்திரிகையாளர் கூட்டத்தில் இச்செவ்வாயன்று வெளியிட்டனர். 86 நாடுகளில் ஏறக்குறைய இருபது மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகம், இச்செவ்வாய் முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு ஜூலையில் பொலிவியா, பரகுவாய், ஈக்குவதோர் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் திரும்பிய பின்னர், ஒரு நாள் பிற்பகலில் La Stampa தினத்தாளின் வத்திக்கான் தொடர்பாளர் பத்திரிகையாளர் Andrea Tornielli அவர்கள் மூன்று ஒளி-ஒலிப் பதிவாளர்களுடன் சென்று, திருத்தந்தையிடம் நடத்திய நீண்ட நேர்காணல் இப்புதியப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

"கடவுளின் பெயர் இரக்கம்" என்ற இப்புத்தகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிலளித்த நாற்பது கேள்விகள் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை, இரக்கத்தை எப்படி புரிந்துகொள்கிறார் என்பதும், அவருடைய தனிப்பட்ட வாழ்வுக்கும், திருஅவைக்கும் இரக்கம் என்ன பொருளைத் தருகின்றது என்பதும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

Mondadori புத்தகக் குழுவின் தலைவர் Marina Berlusconi தலைமையில் இத்திங்கள் மாலை சாந்தா மார்த்தா இல்லம் சென்ற இப்புத்தகக் குழு, இத்தாலிய மொழியில் இதன் முதல் பிரதியை திருத்தந்தையிடம் வழங்கியது.

திருத்தந்தையிடம் வழங்கிய குழுவில், La Stampa தினத்தாளின் வத்திக்கான் தொடர்பாளர் பத்திரிகையாளர் Andrea Tornielli, Mondadori குழுவின் தலைமைச் செயலர் Ernesto Mauri, அதன் நிர்வாக இயக்குனர் Enrico Selva Codde, இந்நூலை அச்சிட்ட Piemme ஆகியோரும் இருந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.