2016-01-12 16:45:00

Madaya,குற்றக்கும்பல், பயங்கரவாதிகளுக்கு பிணையல் நகரம்


சன.12,2016. சிரியாவின் Madaya நகரத்தில் மக்கள், அந்நகரத்திற்குள்ளேயே பிணையல் கைதிகளாக வாழ்கின்றனர் என்றும், ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் ஐ.எஸ். அரசின் உறுப்பினர்களால் அந்நகர மக்கள், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறினார் முதுபெரும் தந்தை Gregory III Laham.

சிரியா அரசுக்கும், புரட்சிப் படைகளுக்கும் இடையே சண்டை இடம்பெறும் Madaya நகரத்தில் இன்னும் இருபதாயிரம் மக்கள் வாழ்கின்றனர் என்று ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட தகவல்கள் பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, அந்தியோக் மெல்கித்தே வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை 3ம் Laham அவர்கள், திருஅவை என்ற முறையில் அந்நகரோடு தங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிவித்தார்.

நிவாரணப் பொருள்களை அனுப்புவதும் ஆபத்தானது, ஏனென்றால், அவை குற்றக் கும்பல்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களிடம் சென்றடையும் என்றுரைத்த முதுபெரும் தந்தை 3ம் Laham அவர்கள், கடந்த ஜூலையிலிருந்து Madaya நகரம், அரசுப் படைகளின் கைவசம் உள்ளது என்றும் கூறினார்.

சிரியாவில் உதவிகள் சென்றடைவதற்கு கடினமாகவுள்ள பகுதிகளில் 45 இலட்சம் மக்கள் வரை வாழ்கின்றனர், இவர்களில் ஏறக்குறைய நான்கு இலட்சம் மக்கள், 15 ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.