2016-01-11 16:09:00

“கடவுளின் பெயர் இரக்கம்” புதிய புத்தகம் சனவரி 12ல் வெளியீடு


சன.11,2016.  “கடவுளின் பெயர் இரக்கம் (The Name of God is Mercy)” என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்று 86 நாடுகளில் ஏறக்குறைய இருபது மொழிகளில் சனவரி 12, இச்செவ்வாயன்று வெளியிடப்படவுள்ளது.

இப்புதியப் புத்தகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் பத்திரிகையாளர் Andrea Tornielli அவர்களுக்கு அளித்த பல நேர்காணல்களில் வெளிப்பட்ட, கடவுளின் இரக்கம் பற்றிய கண்ணோட்டங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இப்புதியப் புத்தகத்தில் அடங்கியுள்ள பல முக்கியக் கூறுகளை, இதன் வெளியீட்டாளர் Piemme அவர்கள், இப்புத்தகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னரே வெளியிட்டுள்ளார்.

தூய பேதுருவைப் போன்று, திருத்தந்தைக்கும் இரக்கம் தேவைப்படுகின்றது, கடவுளின் இரக்கம் தேவைப்படும் ஒரு மனிதர் திருத்தந்தை, என்று தனது நீண்ட நேர்காணலில் திருத்தந்தை கூறியிருப்பது இப்புத்தகத்தில் உள்ளது.

தூயவர்கள் பேதுருவும் பவுலும் கைதிகளாக இருந்தார்கள் என்று பொலிவியா நாட்டில் பால்மசோலா கைதிகளிடம் தான் கூறியதாகவும், சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையிலுள்ள கைதிகளோடு தான் சிறப்பு உறவு கொண்டிருப்பதாகவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

Albino Luciani என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் எழுத்துக்கள் தன்னை மிகவும் ஈர்த்தன என்றும், சில காரியங்கள், வெண்கலத்திலும், பளிங்கிலும் வடிக்கப்படவில்லை, ஆனால் அவை தூசியில் வடிக்கப்பட்டுள்ளன என்பதால் கடவுள் என்னைத் தேர்ந்துகொண்டார் என்று திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், திருத்தந்தையாவதற்கு முன்பே ஒரு மறையுரையில் கூறியிருக்கிறார், இத்திருத்தந்தை தன்னை தூசி என்று அழைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Miserando atque eligendo என்ற தனது ஆயர் இலச்சினை குறித்தும், இளம் வயதில் கடவுளின் இரக்கத்தை அனுபவித்தது குறித்தும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை பாவத்தைக் கண்டிக்கிறது, பாவியிடம் இரக்கம் காட்டுகின்றது என்றும் கூறியுள்ளார்.

பாவத்திற்கும் ஊழலுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் குறித்தும் தனது நேர்காணலில் விளக்கியுள்ள திருத்தந்தை, ஊழல் மனிதர் தனது பாவங்களை ஏற்பதற்குரிய தாழ்மைப் பண்பு இல்லாமல் இருக்கிறார் என்றும், இத்தகைய மனிதர் மன்னிப்புக் கேட்பதற்கு சோர்வடைகிறார், முடிவில் தான் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்ற முடிவுக்கும் வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

150 பக்கங்கள் அடங்கிய இந்தப் புதிய புத்தகத்தில், திருஅவை கேட்பாடுகளைப் பின்பற்றாதவர்களை ஒதுக்கி வைக்காமலும், கண்டனம் செய்யாமலும், காயமடைந்துள்ள மனித சமுதாயத்திடம் பரிவன்புள்ள மேய்ப்பர்களாக வாழுமாறு கத்தோலிக்கத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தீர்ப்பிடுவதற்கு நான் யார் என்ற கேள்வியை, "கடவுளின் பெயர் இரக்கம்" என்ற புத்தகத்தில் அடிக்கடி கேட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.