2016-01-11 15:45:00

பெற்றோர் பிள்ளைகளுக்கு வழங்கும் மரபுரிமைச் செல்வம் விசுவாசம்


சன.10,2016. நம் விசுவாசம், திருமுழுக்கு வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறைக்கு, காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மாபெரும் மரபுரிமைச் செல்வம் விசுவாசமே என்று, இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கானில் அமைந்துள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, 13 ஆண் மற்றும் 13 பெண் குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறையுரையில் இவ்வாறு கூறினார்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மறையுரையை வழங்காமல், அந்நேரத்தில் தனது சிந்தனைகளைச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு பிறந்து நாற்பது நாள்கள் சென்று, மரியாவும் யோசேப்பும் அவரை கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு ஆலயத்திற்கு எடுத்துச் சென்றனர், ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவான இன்று, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் திருமுழுக்குப் பெறுவதற்காக கொண்டு வந்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்தினார்.

நம் விசுவாசம், திருமுழுக்கு வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், ஆண்டுகள் கடக்கும்போது, இக்குழந்தைகள் பிறரில், அதாவது, இப்போதைய பெற்றோரின் பேரக்குழந்தைகள் வாழ்வில் கவனம் செலுத்துகின்றனர், அவர்களும் இதே விசுவாசத்தைக் கேட்பார்கள் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பெற்றோரே, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வழங்கக்கூடிய மாபெரும் மரபுரிமைச் செல்வம் விசுவாசம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள், இதை இழந்துவிடாதீர்கள், இந்த மரபுரிமையைப் பேணி பாதுகாத்து வாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.