2016-01-11 15:39:00

ஒவ்வோர் உண்மையான மதமும், அமைதியை ஊக்குவிப்பதற்குத் தவறாது


சன.11,2016. ஒவ்வோர் உண்மையான மதமும், அமைதியை ஊக்குவிப்பதற்குத் தவறாது என்றும், உலகின் எல்லைவரை அமைதியின் செய்தியைக் கேட்கச் செய்வதற்கான தனது முயற்சிகளை திருப்பீடம் ஒருபோதும் நிறுத்திக் கொள்ளாது என்றும் இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மையில் நாம் சிறப்பித்த, கிறிஸ்மஸ் பெருவிழாவில், அமைதியின் அரசர், வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன் என்றுமுள தந்தை (எசா.9:5) என்றெல்லாம் பெயரிடப்பட்டுள்ள குழந்தையின் பிறப்பை நாம் தியானித்தோம், இந்த விழா, அமைதியை ஊக்குவிக்க வேண்டிய நமது பொறுப்புணர்வை நினைவுபடுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை.

திருப்பீடத்துக்கான அரசியல் தூதுவர்களை இத்திங்களன்று அப்போஸ்தலிக்க மாளிகையில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு நீண்ட உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிபெயர்ந்த மக்கள் பிரச்சனை, தனது இவ்வாண்டு திருத்தூதுப்பயணம், ஏழைகள் மற்றும் துன்புறுவோர்க்கு உதவி ஆகிய மூன்று தலைப்புக்களில் பேசினார்.

பல இதயங்களில் காணப்படும் இறுகியப் புறக்கணிப்புகள், இந்த யூபிலி ஆண்டில், கடவுளின் விலைமதிப்பற்றக் கொடையாகிய இரக்கத்தின் கனிவால் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை.

பெருமளவான மக்களின் அண்மைக் குடிபெயர்வு, ஐரோப்பிய விழுமியங்களுக்கும், மரபுகளுக்கும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது, ஆயினும் ஐரோப்பியக் கண்டம் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, புதிதாக வரும் குடியேற்றதாரரை ஏற்க வழி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் வெளியிட்டார் திருத்தந்தை.

குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலிருந்து வெள்ளமென வரும் மக்கள் ஐரோப்பாவுக்கு பெரும் சுமையாக உள்ளனர் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இம்மக்களின் சொந்த நாடுகளுடன் உரையாடலைத் தொடங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இன்றையக் குடும்பங்கள் சந்திக்கும் எண்ணற்றச் சவால்களையும் குறிப்பிட்டத் திருத்தந்தை, குடும்பங்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் நிலையான அர்ப்பணம் குறித்த பயம் பரவலாக காணப்படுகின்றது, இதனால் இளையோரும், வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார். கடந்த நவம்பரில் ஆப்ரிக்காவுக்கு மேற்கொண்ட திருத்தூதுப்பயணம் பற்றியும் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீடத்துடன் 180 நாடுகள் அரசியல் உறவைக் கொண்டிருக்கின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.