2016-01-09 15:18:00

மெக்சிகோ திருத்தூதுப்பயண உண்டியல்,குடியேற்றதாரர் மையங்கள்


சன.09,2016. மெக்சிகோ திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் பொதுத் திருப்பலிகளில் எடுக்கப்படும் உண்டியல், அந்நாட்டிற்குப் பெருமளவாக வரும் குடிபெயர்ந்த மக்களை வரவேற்பதற்கென இரு புதிய மையங்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டை முன்னிட்டு, மெக்சிகோவின் Mazapa எல்லையில் ஒன்றும், Salto de Aguaவில் மற்றொன்றுமாக இரு புதிய மையங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக, அறிவித்தார் ஆயர் Felipe Arizmendi Esquivel.

மெக்சிகோவில், திருத்தந்தை நிறைவேற்றும் பொதுத் திருப்பலிகளில் எடுக்கப்படும் உண்டியலை, மெக்சிகோ ஆயர் பேரவையின் அனுமதியுடன், இம்மையங்கள் அமைப்பதற்குப் பயன்படுத்தவுள்ளதை, திருத்தந்தையிடம் தான் தெரிவித்ததாக கூறினார் ஆயர் Esquivel.

மெக்சிகோ திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குற்றங்கள் மலிந்த மொரேலியா நகருக்கும் செல்வார். இந்நகர், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோவுக்குமான எல்லையில் உள்ளது.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.