2016-01-09 14:53:00

திருத்தந்தை:26 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளம்


சன.09,2016. ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவான இஞ்ஞாயிறன்று 26 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் அமைந்துள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில் இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"நம் ஆண்டவர் மன்னிப்பு அளிப்பதில் ஒருபோதும் சோர்வடையாதவர் என்பதை மறக்க வேண்டாம், ஆனால், சிலநேரங்களில் நாம் மன்னிப்புக் கேட்பதற்குச் சோர்ந்து போகிறோம்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பது போன்று, கடவுளோடு ஒப்புரவு அடைவதற்கு, கத்தோலிக்கருக்கு, யூபிலி காலம் மாபெரும் காலம், எனவே இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த யூபிலி ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள பரிபூரணப் பலனைப் பெறுவதற்கு, புனிதக் கதவின் முன்பாக சில பக்திமுயற்சிகளை நினைவுகூர வேண்டும், ஒன்று, அனைத்துப் பாவங்களையும் தவிர்ப்பதாக உறுதி எடுக்க வேண்டும், இதற்கு ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வேண்டும். பின்னர் திருப்பலியில் கலந்துகொண்டு திருநற்கருணை பெற வேண்டும், விசுவாச அறிக்கையைச் செபிக்க வேண்டும், திருத்தந்தை மற்றும் அவரின் கருத்துக்களுக்காகச் செபிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.