2016-01-09 15:03:00

கறுப்பு நசரேன் பக்தர்களைத் தீர்ப்பிட வேண்டாம்


சன.09,2016. பிலிப்பீன்சில், கறுப்பு நசரேன் பக்தர்களின் தீவிர பக்தி குறித்து தீர்ப்பிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார், அந்நாட்டு மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே.

இச்சனிக்கிழமையன்று மனிலாவில் கறுப்பு நசரேன் இயேசு கிறிஸ்து பவனி நடைபெறுவதற்கு முன்னர் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், கறுப்பு நசரேன் திருவுருவத்தின் மீது பக்தர்கள் வைத்திருக்கும் பற்றியெரியும் உறுதியான பக்தி, அவர்களின் விசுவாசம், அன்பு மற்றும் நன்றியின் வெளிப்பாடு என்று கூறினார்.

இந்தப் பக்தர்கள் ஒருவரையொருவர் வற்புறுத்துகின்றார்கள் என்று நினைப்பது சரியல்ல என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இந்த அனுபவத்தை உணரும் எவரும் அதில் பற்றுதல் கொள்வார்கள் என்றும் கூறினார்.

மேலும், இம்மாதம் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிலிப்பீன்சின் செபுவில் நடைபெறவுள்ள 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு குறித்து ஒவ்வொருவரும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார் கர்தினால் தாக்லே.

உலகிலே மிகப்பெரிய கத்தோலிக்க விழாவான கறுப்பு நசரேன் பவனியில், இச்சனிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பழுப்பு சிவப்பு நிறப் போர்வையால் போர்த்தப்பட்டு, தலையில் முள்களுடன், சிலுவையைத் தூக்கிச் செல்லும் ஆள் உயர கறுப்பு நசரேன் இயேசுவின் திருவுருவம் இப்பவனியில் எடுத்துச் செல்லப்பட்டது. பிலிப்பைன்சில் இஸ்பானிய காலனி ஆதிக்கம் இடம்பெற்றபோது, 1607ம் ஆண்டில் அகுஸ்தின் சபை அருள்பணியாளர்கள் இத்திருவுருவத்தை மனிலாவுக்கு கொண்டு சென்றனர். மனிலா கறுப்பு நசரேன் பசிலிக்காவில் இத்திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CBCP/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.